அறிமுகம் :
முகலாயப் பேரரசின் வீழ்ச்சியோடு மைய அதிகாரம் நொறுங்கியதால் ஓர் ஆங்கிலேய வணிக
நிறுவனம் இந்தியாவை கையகப்படுத்தும் நிலை ஏற்பட்டது. ஆரம்பத்தில் ஆங்கிலேய கிழக்கிந்தியக்
கம்பெனியின் நோக்கம் நிர்வாகம் செய்வது அல்ல; மாறாக அது சிக்கலில்லாமல் வியாபாரம்
புரிவதாகவே இருந்தது. எனினும், வங்காளத்தில் 1770இல் ஏற்பட்ட கடுமையான பஞ்சத்திற்குப் பின்
சற்றே அதிகாரத்தை பொறுப்புணர்வு கொண்டதாக அவர்கள் மாற்றினர். ஒருபுறம் பாரபட்சமான
சுரண்டல் பொருளாதாரக் கொள்கையைக் கடைபிடித்தபோதும், அவர்கள் தாங்கள் ஆண்ட
மக்களின் பாதுகாப்பையும் அவர்களின் நீதி நடைமுறைகளையும் காக்க முயல்வதாகப்
பறைசாற்றிக் கொண்டார்கள். பாரம்பரிய அரசாட்சி சர்வாதிகாரக் கொடுமையை உள்ளடக்கியதாக
இருப்பதாலும், எதிர்பாராத படையெடுப்புகளாலும் கள்வர்களாலும் மக்கள் இன்னல் அனுபவிப்பதாலும்
தங்களின் அதிகாரம் விரிவடைவது தவிர்க்க முடியாததென நியாயப்படுத்திக் கொண்டார்கள்.
இருப்புப்பாதை ஏற்படுத்தியதும், தந்தி தொடர்பு முறையும், எதிர்ப்புகளை ஒடுக்கவும், உள்ளூர்
மக்களை எளிதாகக் கட்டுப்படுத்தவும் உதவின. ஆங்கிலேயரின் விவசாய, வணிகக் கொள்கைகள்
இந்தியப் பொருளாதாரத்தை நாசப்படுத்தின. இந்திய நாட்டின் வளங்கள் பல வகைகளிலும்
கொள்ளைபோயின. பாதிக்கப்பட்ட விவசாயிகளும் நெசவாளர்களும் இதன் விளைவாக 1830களின்
பின் அதிக அளவில் ஆங்கிலேய அதிகாரம் பரவியிருந்த நாடுகளில் இருந்த தோட்டங்களுக்கு
கூலி உழைப்பாளிகளாகப் புலம்பெயர்ந்தார்கள்
நில நிர்வாக முறை: நிலையான நிலவரி முறையும் இரயத்துவாரி முறையும்:
ஒழுங்குமுறைச் சட்டம் 1773 இன்படி கம்பெனி ஊழியர்களின் வரவுசெலவு
கணக்கு பற்றி இயக்குநர் குழு பிரிட்டிஷ் கருவூலத்திற்குத் தெரியப்படுத்துவது
சட்டரீதியாக கடமையாக்கப்பட்டது. ஆளுநரும்தலைமைத் தளபதியும் இரு
ஆலோசகர்களும் கொண்ட குழு, வருவாய் வாரியமாகச் செயல்பட்டு, வருவாய் குறித்து
விவாதித்தது. 1784ஆம் ஆண்டின் பிட் இந்தியச் சட்டம், இராணுவ மற்றும்
குடிமை அமைப்புகளை தனித்தனியாகப் பிரித்தது. தானே ஒரு நிலச்சுவான்தாரராக இருந்த
காரன்வாலிஸ் பிரிட்டிஷ் முறையைப் பின்பற்றிய நிலப்பிரபுத்துவ முறையை உருவாக்க
நினைத்தார். வருவாய் வசூலிப்பவரோடு கலந்துபேசி அவர் ஒரு முடிவுக்கு வந்தார்.
இது ஜமீன்தார் என்கிற இடைத்தரகர்களை உருவாக்கியதோடு பயிரிடுவோரைக் குத்தகை
விவசாயிகளாக மாற்றியது. இயக்குநர் குழுவின் அறிவுரைப்படி வங்காளம், பீகார்,
ஒரிசா பகுதிகளின் ஜமீன்தார்களுடன் அவர் ஏற்படுத்திக்கொண்ட அமைப்பு முறையே
நிலையான நிலவரி முறையாக அறியப்படுகிறது. ‘சாசுவதம்’ என்பது நிலத்தை அளவிட்டு
அதனடிப்படையில் ஒவ்வொரு ஜமீன்தாரும் அரசுக்கு வழங்க வேண்டிய வருவாயை
நிர்ணயம் செய்வதாகும். 1793இல் வங்காளம், பீகார், ஒரிசா ஆகிய பகுதிகளுக்கு அந்த நிர்ணயம்
நிரந்தரமாக்கப்பட்டது. இம்முறையின் மூலமாக வரி வசூலிப்போராக இருந்தோர் வாரிசுரிமை
கொண்ட ஜமீன்தார்களாக மாற்றி அரசு வழங்கிய நிலத்தின் பயன்களை அனுபவிக்கலானார்கள்.
நிர்ணயிக்கப்பட்ட மதிப்பிற்கு மேலாக வசூலிக்கப்பட்ட அனைத்தையும் ஜமீன்தார்கள்
கையகப்படுத்திக் கொண்டார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல்
கால்நூற்றாண்டு சென்னை மாகாணத்தின் நில வருவாய் வரலாற்றின் தொடக்கக் காலமாகும்.
ஆரம்பத்தில் பெரும் சர்ச்சைக்குப் பின் நிரந்தர நிலவரித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
செங்கல்பட்டு, சேலம், திண்டுக்கல் மாவட்டங்கள் பல மிட்டாக்களாக பிரிக்கப்பட்டு அதிக தொகைக்குக்
கேட்போருக்கு வழங்கப்பட்டது. அவ்வாறு நிலவுரிமை பெற்றோர் வேளாண் குடிகளை
அப்புறப்படுத்தியமையால் ஓரிரு ஆண்டுகளில் தோல்வியையே எதிர்கொண்டனர். ஆகவே
அம்முறை கைவிடப்பட்டது. அதன்பின் வருவாய் வாரியம் (Board of Revenue) கிராமங்களைக்
குத்தகைக்கு விடும் முயற்சியை மேற்கொண்டது
துணைப்படைத் திட்டமும், வாரிசு உரிமை இழப்புக் கொள்கையும் :
கவர்னர் ஜெனரல் வெல்லெஸ்லி (1798-1805) பிரிட்டிஷ் ஆட்சியை உறுதி செய்யும் பொருட்டு
ஒரு முன்னோக்கிய கொள்கையை பின்பற்றினார். அவர் சிற்றரசுகளைப் போர்
வெற்றியின் மூலமாக வசப்படுத்தவில்லை. அதற்கு மாறாக அரசர்களைப் பெயரளவிற்கு அங்கீகரித்து
அவர்களுக்கு மானியம் வழங்கியதோடு மொத்த நிர்வாகத்தையும் தன் வசப்படுத்தினார்.
வெல்லெஸ்லிக்கு முன்பாக இந்திய அரசர்களோடு கம்பெனி கூட்டணி அமைத்திருந்த
நிஜாமும், அவத் நவாபும் பிரிட்டிஷ் படைகளைப் பராமரிக்க மானியம் பெற்றிருந்தார்கள்.
ஆனால் அவ்வாறு பராமரித்த படைப்பிரிவுகள் அவர்களின் நாட்டு எல்லைகளுக்கு வெளியே
தான் நிறுத்தப்பட்டிருந்தன. பராமரிப்புச் செலவு பணமாகவே வழங்கப்பட்டது. பணப்பட்டுவாடா
குறித்த நேரத்தில் நடந்தேறாதபோது சிக்கல் எழுந்தது. இம்முறையை வெல்லெஸ்லி
துணைப்படைத் திட்டத்தின் மூலம் விசாலமாக்கியதோடு ஹைதராபாத், மைசூர்,
லக்னோ, மராத்திய பேஷ்வா, போன்ஸ்லே(கோலாப்பூர்), சிந்தியா (குவாலியர்) போன்ற
அரசுகளையும் அரசர்களையும் அதன் கீழ்க்கொண்டு வந்தார்.
சுதேச அரசுகளும் ஆங்கிலேயரின் மேலாதிக்கமும் :
பிளாசிப் போருக்குப்பின் (1757) கம்பெனி தன்னை விரிவுபடுத்தும் முகமாக இரட்டை ஆட்சி முறையை
உருவாக்கியது. இம்முறையின் கீழ், மேலளவில் ஓர் அதிகாரமற்ற அரசரை வைத்துக்கொண்டு
அவரது பின்புலத்தில் கம்பெனி அதிகாரிகள் செயலாற்றினர். கொள்கை யளவில் கம்பெனி,
தன்னை திவானாக (வரி வசூலிக்கும் அதிகாரம்) மட்டும் சொல்லிக்கொண்டாலும் முழு அதிகாரமும்
அதனிடமே குவிந்திருந்தது. கிளைவால் உறுதியளிக்கப்பட்டிருந்த முகலாய மன்னருக்குச்
செலுத்தவேண்டிய கப்பம் நிறுத்தப்பட்டதன் மூலம் இவ்வதிகாரம் வலியுறுத்தப்பட்டது.
கடித அளவிலான மரியாதையைக்கூடக் காரன்வாலிஸ் கொடுக்க மறுத்தார். வெல்லெஸ்லி
மேலும் நெருக்கடியைக் கூட்டும் வண்ணமாக பிரிட்டிஷாருக்குச் சாதகமாகத் துணைப்படைத்
திட்டத்தைக் கடைபிடித்தார். அதனை ஹைதராபாத், பூனா, மைசூர் போன்ற முக்கிய
அரசுகளை ஏற்க வைத்தார். கவர்னர் ஜெனரலாக 1813ஆம்
ஆண்டு பதவியேற்ற ஹேஸ்டிங்ஸ் முகலாய முத்திரையைப் (மொய்ரா) பரிவர்த்தனைகளில்
தவிர்த்தார். கம்பெனியின் உடைமைகள் மீது முகலாய மன்னர் இரண்டாம் அக்பர் செலுத்திவந்த
ஆதிக்கத்தை நிறுத்திக்கொள்ளாவிட்டால் அவரைத் தான் சந்திக்க முடியாது என்றார்
கம்பெனி ஆட்சியில் கல்வி வளர்ச்சி :
மௌல்வி ஒருவரின் துணையோடு வாரன் ஹேஸ்டிங்ஸ் ஒரு மதரசாவை
உருவாக்கியதே பிரிட்டிஷார் கல்விக்கு ஆற்றிய முதல் தொண்டு ஆகும். இம்மதரசா நாற்பது
மாணவர்களைக் கொண்டு துவங்கப்பட்டு அவர்களுக்கு உதவித்தொகையும் வழங்கியது.
இஸ்லாமியர்களுக்கு வாரன் ஹேஸ்டிங்ஸ் செய்தது போன்ற சேவையை இந்துக்களுக்கு
மேற்கொள்ள அவருக்குப் பின் பொறுப்பேற்றோர் தயாராக இருந்தனர். காரன்வாலிஸ்
வாரணாசியில் ஒரு சமஸ்கிருதக் கல்லூரியை (1791) நிறுவினார். அதன் பின் வந்த
இருபது ஆண்டுகளில் பெரிய நடவடிக்கைகள் எதையும் பிற ஆளுநர்கள் மேற்கொள்ளவில்லை.
கம்பெனியின் நலம் கருதி இந்தியாவில் கல்வி வளர்ச்சியை மேற்கொள்வது விரும்பத்தக்கது அல்ல
என்றே நினைத்து செயல்பட்டது. பின்னர் 1813ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பட்டயச்சட்டத்தில்
தெளிவான கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. ஹேஸ்டிங்ஸ்
கவர்னர் ஜெனரலாகப் பொறுப்பேற்ற பின் கிறித்தவ சமயத் தொண்டாற்றுவோர்
மூலமாகத் தாய்மொழிக் கல்வியின் வளர்ச்சியை ஊக்குவித்தார். கல்கத்தாவில் 1817ஆம்
ஆண்டு ஆங்கில மொழியையும் மேற்கத்திய அறிவியலையும் ஆதரித்த இந்தியரின்
எண்ணவோட்டத்தைப் பூர்த்தி செய்யும் விதமாகத் துவக்கப்பட்ட இந்து கல்லூரிக்கு அவரே
புரவலரானார். அலெக்சாண்டர் டஃப் போன்ற கிறித்தவ சமயப்பணியாளர்களும் கல்வியை
வளர்த்தெடுக்கத் தூண்டுகோலாக இருந்தனர். ஹேஸ்டிங்ஸின் தாராளப்பார்வையும், அதன்
விளைவாக 1799இல் பத்திரிகைகளுக்கு விதிக்கப்பட்டிருந்தக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதும்
கல்வி வளர்ச்சியில் பாராட்டுக்குறிய நடவடிக்கைகளாகும். இச்சூழலில்தான் 1818ஆம்
ஆண்டு வங்காள வாராந்திர இதழ் ‘சமாச்சார் தர்பன்’ துவங்கப்பட்டது
பாதுகாப்பு முயற்சிகளும் வளர்ச்சி
நடவடிக்கைகளும் :
பிண்டாரிப் போர் :
பிண்டாரி கொள்ளை க்கூட்டத்தில் இஸ்லாமியர்கள், இந்துக்கள் என்ற இரு
சமயத்தைச் சார்ந்தவர்களும் இருந்தனர். துணைப்படைத் திட்டத்தினால் வேலையிழந்த
பல வீரர்கள் இக்கொள்ளைக்கூட்டத்தில் சேர்ந்து கவலை கொள்ளும் அளவுக்குப் பெருகினர்.
பிரிட்டிஷ் அரசு பிண்டாரிகள் மீது போர்ப் பிரகடனம் செய்தது. ஆனால் அது மராத்தியருக்கு
எதிரானப் போராக உருப்பெற்றது. இப்போர்கள் பல்லாண்டுகள் (1811-1818) நடைபெற்றாலும்
மொத்த மத்திய இந்தியாவையும் இறுதியில் பிரிட்டிஷார் வசம் கொண்டு சேர்த்தது
தக்கர்களை அடக்குதல் :
தக்கர்கள் பதினான்காம் நூற்றாண்டிலிருந்து தில்லிக்கும் ஆக்ராவுக்கும் இடைப்பட்ட
பகுதிகளில் கொள்ளையடித்துக்கொண்டிருந்த கூட்டத்தினர் ஆவார். அவர்கள் தங்கள்
அமைப்பை உறுதிமொழி ஏற்பதன் மூலமாகவும், சில சடங்கு ஆச்சாரங்களைப் பின்பற்றுவதன்
மூலமாகவும் பலப்படுத்தி அப்பாவி வழிப்போக்கர்களை எதிர்பாராத தருணத்தில்
தாக்கி காளியின் பெயரால் கொலை செய்து வந்தனர். தக்கர்களின் அச்சுறுத்தலை அடியோடு
நீக்க பெண்டிங் ஒரு திட்டத்தை வகுத்து அவர்களை அழிக்க வில்லியம் ஸ்லீமேனை
நியமித்தார். மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தக்கர்களின் குற்றங்கள் 1831 முதல் 1837
வரையான காலகட்டத்தில் நிரூபணமானது. ஐந்நூறு பேர் அரசு சாட்சிகளாக மாறினர்.
தக்கர்களை முன்னிட்டு எழுந்த பிரச்சினைகள் 1860ஆம் ஆண்டுவாக்கில் முடிவுக்கு வந்தன
சதி ஒழிப்பு :
விதவைகளை அவர்களது கணவர்களின் சிதையோடு சேர்த்து எரிக்கும் சதி முறையை
ஒழிக்க முடிவெடுத்ததின் மூலம் வில்லியம் பெண்டிங் தன் மனிதாபிமானத்தை
வெளிப்படுத்தினார். அவருக்கு முன் பதவி வகித்த கவர்னர் ஜெனரல்கள் சமயம்
சம்பந்தப்பட்ட விஷயத்தில் தலையிட யோசித்த பின்புலத்தில், பெண்டிங் தயக்கமில்லாம ல் சட்டம்
(சதி ஒழிப்புச் சட்டம், 1829) ஒன்றை இயற்றி, அதன் மூலம் இப்பழக்கத்திற்கு ஒரு முடிவு
கொண்டுவர முயன்றார். இராஜா ராம் மோகன் ராயின் பிரச்சாரங்களும் முயற்சியும் இந்த
மனிதத்தன்மையற்ற முறை ஒழிய முக்கியக் காரணமாக இருந்தன
இருப்புப்பாதையும், தபால்-தந்தி முறையும் :
இருப்புப்பாதை அமைக்க முதல் கோரிக்கையை வைத்தது ஐரோப்பிய வியாபாரச் சமூகமே ஆகும்.
இந்தியாவில் வெற்றிகரமாக இருப்புப்பாதைப் போக்குவரத்துத் திட்டத்தை நிறைவேற்ற முடியுமா
என்ற சந்தேகம் கிழக்கிந்தியக் கம்பெனியின் இயக்குனர்களிடம் இருக்கவே செய்தது.
இருப்புப்பாதைப் போக்குவரத்தின் மூலமாக பொருளாதாரச் சாதகங்கள் ஏற்படும் என்று
டல்ஹௌசி வாதிட்டு அதை வலியுறுத்தினார். எனினும் 1857 பெருங்கிளர்ச்சிக்கு முன்பு வெறும்
முந்நூறு மைல் தூரம் மட்டுமே இருப்புப்பாதை அமைக்கப்பட்டிருந்தது.
நீர்ப்பாசன வசதி :
பாசனவசதி ஏற்படுத்திக் கொடுப்பதை பிரிட்டிஷ் அரசு புறக்கணித்தது. இந்திய அரசர்கள் வெட்டிச்
சென்ற பழைய கால்வாய்களும் குளங்களும் பயனற்றுக் கிடப்பதை கண்டபோதும் அவற்றைத்
தூர்வாரி பயன்பாட்டிற்குக் கொடுக்கவோ , புதுப்பிக்கவோ கம்பெனி முயற்சி செய்யவில்லை.
சென்னையில், நாம் பின்வரும் பக்கங்களில் விரிவாகக் காணப்போவது போல, ஆர்தர்
காட்டன் என்ற பொறியியல் அலுவலர் ஒருவரின் தனிப்பட்ட ஆர்வத்தால்
சிற்சில பாசன வேலைகள் நடந்தேறின.கொள்ளிடத்தின் குறுக்கே 1836இல் அணையைக்
கட்டினார். கிருஷ்ணா நதியின் குறுக்கே அணை கட்டும் பணி 1853ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.
பிரிட்டிஷ் அரசின் நேரடிக் கட்டுபாட்டுக்குள் இந்தியா செல்வதற்கு முன்பாக வட இந்தியாவில்
1830இல் யமுனா கால்வாயும், 1857இல் கங்கைக் கால்வாயை 450 மைல்கள் வரை நீட்டித்த
பணியும், 1856இல் பஞ்சாப் பகுதியில் அமைந்த பாரி இடைத்துறைக் கால்வாய் தோண்டும் பணியும்
பாசன வசதி மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க முக்கிய பணிகளாகும். ஆனால் கால்வாய்கள் மண்ணில்
உப்புத் தன்மையை கூட்டவும், தேவையில்லாத இடங்களில் தண்ணீர் தேங்கவும் வழிவகுத்தது
காடுகள் :
பிரிட்டிஷ் இந்திய அரசுக்கு வருவாய் ஈட்டிக்கொடுக்க கூடியதாக நிலமே விளங்கியது.
அதனால் வேளாண் நிலத்தை விரிவுபடுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு அதற்காகக் காடுகள்
அழிக்கப்பட்டன. ஜங்கிள் மஹல் காடுகளிலிருந்து ஜமீன்கள் உருவாக்கப்பட் டு ஏலம் விடப்பட்டபின்
முறையான வேளாண்மைக்கு உட்படுத்தப்பட்டன. இந்நிலங்களின் பூர்வீக குடிகளான சந்தால்
பழங்குடி மக்கள் விரட்டப்பட்டார்கள். ஆகவே சந்தால் இன மக்களே பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்த
முதல் பழங்குடி மக்களாகத் திகழ்கிறார்கள். ஐரோப்பிய நிறுவனங்களுக்கு மலைகளில்
தோட்டப்பயிர் விவசாயத்திற்கு நிலங்கள் சொற்ப விலைக்கு விற்கப்பட்டது. ஆர்வ மிகுதியால்
தோட்டப்பயிர்களைச் சாகுபடி செய்ய இந்திய அரசர்களும் ஜமீன்தாரர்களும் காடுகளை
அழித்தார்கள். ஆனால் காப்பி பல இடங்களில் செழித்து வளரவில்லை. எனினும், விடாமல்
காடுகளை அழித்துக் காப்பித் தோட்டங்களை உருவாக்க முயன்றுகொண்டே இருந்தார்கள்.
இருப்புப்பாதை பதிக்கும் பொருட்டு பெருமளவில் மரங்கள் வெட்டப்பட்டன. 1870களில் ஆண்டுக்கு
கிட்டத்தட்ட பத்து இலட்சம் மரங்கள் என்ற அளவில் வெட்டப்பட்டு இருப்புப் பாதை அமைக்க
தண்டவாளக் குறுக்குக்கட்டைகளாகப் பயன்படுத்தப்பட்டன. இந்திய மரங்களில் சால்,
தேவதாரு, தேக்கு போன்றவை அவற்றின் வலிமைக்காக பிற மரங்களை விட அதிகம்
வெட்டப்பட்டன. வங்காளம் மற்றும் பீகார் பகுதிகளை உள்ளடக்கிய ஜங்கிள் மஹால்
காடுகளிலிருந்து அதிக எண்ணிக்கையில் அவை வெட்டப்பட்டன. இங்கிலாந்தில் இருப்புப்பாதை
அமைக்கும்பொருட்டு இந்தியாவிலிருந்து மரப்பலகைகள் அனுப்பப்ப ட்டன. இந்தியக்
காடுகளின் செல்வவளம் அழிக்க முடியாதது என்ற தொன்மக்கூற்று உடைபட்டது.
இப்பின்னணியில் காடுகளின் வளங்களை மேலாண்மை புரிவதற்கும், கட்டுப்பாட்டுக்குள்
கொண்டு வருவதற்கும் 1865இல் இந்திய வனச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. பாரபட்சமான
இச்சட்டம் காடுகளின் வளங்களைப் பூர்வீககுடிகள் பயன்படுத்தத் தடை விதித்ததால்
அவர்களின் அதிருப்தியைப் பெற்றது. அவர்களின் எதிர்ப்பையும் புறக்கணிப்பையும் கட்டுக்குள்
கொண்டுவரும் விதமாக கொடுமையான குற்றப் பழங்குடியினர் சட்டம், 1871இல் இயற்றப்பட்டது.
காலனிய ஆதிக்கக்காலம் முழுமையும் அவ்வப்போது பழங்குடியின மக்கள் காலனி
அரசுக்கு எதிராகக் கிளர்த்தெழுந்தனர். காலனி ஆட்சியில் இயற்றப்பட்ட வனச் சட்டங்கள்
இன்றளவிலும் மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றன.
தொழில் முடக்கமும் செல்வச் சுரண்டலும் :
ஐரோப்பிய நாடுகள் கிழக்கிலிருந்து பெருமளவில் இறக்குமதி செய்துகொண்ட அளவிற்கு
ஆரம்பத்தில் ஏற்றுமதி செய்ய முடியவில்லை. ஏற்றுமதியான நறுமணப் பொருட்கள், பருத்தி,
ஆபரணங்கள் முதலானவற்றுக்கு மாற்றாகக் கிழக்கு நாடுகளுக்கு ஐரோப்பாவிலிருந்து
எதுவும் தேவைப்படவில்லை. இந்த நிலையை இங்கிலாந்தின் ஜவுளி உற்பத்தியில் ஏற்பட்ட
தொழிற்புரட்சி முதன்முறையாக மாற்றியமைத்தது. அதன்பின் திட்டமிட்டே இந்தியாவில் தொழில்கள்
அழிவுக்குத் தள்ளப்பட்டன. உலகின் துணி ஏற்றுமதியில் முதன்மை பெற்று விளங்கிய
இந்தியா, லங்காஷ்யரின் (இங்கிலாந்து) பருத்தி ஆடைத் தேவைக்குச் சந்தையாக மாற்றப்பட்டது.
குறைந்த விலையில் இயந்திரங்களின் மூலம் தயாரிக்கப்பட்ட பிரிட்டிஷ் பொருட்கள் இந்தியச்
சந்தைகளில் குவியலாயின. நீண்டகாலப் பயன்பாட்டுக்கு உகந்தமையாக இருந்ததனாலும்,
சொற்ப விலைக்கு விற்கப்பட்டதாலும் இயந்திரத் தயாரிப்பில் உருவான பொருட்களின் பயன்பாடு
ஓங்கி, இந்தியப் கைவினைப் பொருட்கள் உற்பத்தி நலிவடையக் காரணமாகியது
பஞ்சங்களும், ஒப்பந்தத் கூலிகளும் :
பஞ்சம் இந்தியாவுக்குப் புதியதல்ல என்ற போதும் பிரிட்டிஷ் ஆட்சியில் அது அடிக்கடி தோன்றியதோடு
மிக கோரமானதாகவும் விளங்கியது. நான்கு பஞ்சங்களே 1800ஆம் ஆண்டிலிருந்து 1825ஆம்
ஆண்டு வரையிலான காலத்தில் தோன்றின. ஆனால் அந்நூற்றாண்டின் கடைசி இருபத்தைந்து
ஆண்டுகளில் 22 பஞ்சங்கள் தோன்றின. இவற்றால் ஐம்பது இலட்சத்திற்கும் மேலானோர்
இறந்ததாகக் கருதப்படுகிறது. முன்னாள் அரசு உயர் அதிகாரியான ரோமேஷ் சந்திர தத் 1901ஆம்
ஆண்டில் கணக்கிடும் போது 1860ஆம் ஆண்டிற்கு பின் 10 பெரும் பஞ்சங்களைச் சுட்டுவதோடு,
அதனால் ஒன்றரை கோடி மக்கள் இறந்ததாகவும் கூறுகிறார்.தலையிடா வணிகக்கொள்கை
(Laissez Faire) என்பதைக் கடைபிடிப்பதாக 1833இல் காலனி அரசு எடுத்த முடிவைப் பஞ்சக்காலத்திலும்
பலமாகப் பின்பற்றியதாகத் தெரிகிறது. பல ஆண்டுகளாக மேற்கத்தியக் கல்வி முறையில்
கற்ற இந்திய இளைஞர்கள் பிரிட்டிஷார் ஆட்சியே இந்தியாவை வறுமையின் பிடியில்
வைத்திருக்கிறது என்று வாதிட்டனர். ஒரிசாவில் ஏற்பட்ட பஞ்சத்தில் மூன்றில் ஒருவர் என்ற
அளவில் மக்கள் பசியாலும் நோயாலும் செத்து மடிந்ததே அக்கூற்றுக்குச் சான்றாக விளங்கியது.
இந்நிகழ்வே தாதாபாய் நௌரோஜியை தமது வாழ்க்கை முழுக்க இந்திய வறுமை பற்றிய
ஆய்வை மேற்கொள்ள வைத்தது
Comments
Post a Comment