அறிமுகம் :
பதினைந்து மற்றும் பதினாறாம்
நூற்றாண்டுகளில் நிகழ்ந்த மூன்று பெரும்
நிகழ்வுகளாக மறுமலர்ச்சி, புவியியல் கண்டுபிடிப்புகள்,
சீர்திருத்த இயக்கங்களின் தோற்றம் ஆகிய
மூன்று முக்கிய நிகழ்வுகளைக் குறிப்பிடலாம்.
இவை இடைக்காலம் தொடங்கி நவீனகாலம்
வரையிலான மாற்றங்களைக் குறிக்கும் விதமாக
அமைந்தன. மறுமலர்ச்சியின் சாரம் மனிதர்களுக்கும்
இயற்கைக்கும் முக்கியமாக அமைந்த சமயம்
இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டதே எனலாம்.
மறுமலர்ச்சி நவீன உலகை உருவாக்குவதில்
மிக முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஐரோப்பாவின் புவியியல் சார்ந்த கற்பனைகளுக்கு
அது ஊக்கமாக அமைந்தது. கொலம்பஸ் பெற்ற
வெற்றியானது வெளிநாட்டு அமைப்புக்களுக்கு
பெரிதும் ஊக்கமளிப்பதாக அமைந்தது. கத்தோலிக்க
தேவாலயங்களுக்கு எதிரான கிளர்ச்சியாக
உருவான சீர்திருத்தங்கள் சமய வரைபடத்தில்
மாற்றங்களை உருவாக்கியதோடு சமயம் தொடர்பான
அணுகுமுறைகளில் ஒரு பெரிய திருப்புமுனையை
ஏற்படுத்தியது. முடியாட்சியை ஒருங்கிணைக்க
மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் மற்றும் அதனை
உறுதியாக்கும் நடவடிக்கைகளின் விளைவாக
ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய
நாடுகளில் தேசிய அரசுகள் உருவாக வழியமைத்தன.
இத்தாலியில் ஏற்பட்ட மறுமலர்ச்சியும் மேற்கு
ஐரோப்பியாவில் அதன் பரவலும் :
மறுமலர்ச்சியின் முக்கியத்துவம் :
லத்தீன் மூலத்தில் இருந்து உருவான
மறுமலர்ச்சி (Renaissance) என்ற வார்த்தையின்
பொருள் மறுபிறப்பு அல்லது புத்துயிர்ப்பு என்பதாகும்.
இது கிரேக்க மற்றும் ரோமானிய பகுதிகளில்
செம்மொழிகளைக் கற்றல் தொடர்பாக திடீரென
எழுந்த ஆர்வத்தை குறிப்பதாக அமைகிறது. எனினும்
இந்த வளர்ச்சியின் போக்கில் மறுமலர்ச்சி என்பது
பண்டைய கிரேக்க மற்றும் ரோமானிய செவ்வியல்
இலக்கியங்களைக் கற்றல் என்பது மட்டுமல்லாமல்
அதனை புத்துயிர்ப்பு பெறச்செய்வதாகவும்
இருந்தது. அது கலை, இலக்கியம், அறிவியல்,
தத்துவம், கல்வி, சமயம் மற்றும் அரசியல்
ஆகிய துறைகளில் புதிய சாதனைகளை
உள்ளடக்கியதாக அமைந்தது. மறுமலர்ச்சி
பல்வேறு கொள்கைகளை உள்ளடக்கியதாக
இருந்தது. மனிதநேயம், ஐயுறவுவாதம், தனித்துவம்
மற்றும் சமயச்சார்பின்மை ஆகியன அவற்றில்
குறிப்பிடத்தக்கவையாக இருந்தன. சமயத்துறவிகள்
மற்றும் பிரபுக்களின் பங்களிப்பாக இல்லாமல்
சாதாரண மனிதர்களின் பங்களிப்பாக மறுமலர்ச்சி
இருந்தது அதன் சிறப்பம்சமாகும்.
மறுமலர்ச்சிக்கான காரணங்கள் :
சிலுவைப் போர்களின்போது (முஸ்லிம்
ஆட்சியில் இருந்து புனித நிலத்தை மீட்பதை
குறிக்கோளாகக் கொண்ட சமயப்போர்கள்)
ஏற்பட்ட புதிய அனுபவங்கள் வாயிலாக
வெனிஸ், பிளாரன்ஸ், ஜெனோவா, லிஸ்பன்,
பாரிஸ், இலண்டன், ஆன்ட்வெர்ப், ஹாம்பர்க்
மற்றும் நூரெம்ப ர்க் ஆகிய சுதந்திரமான,
வர்த்தக நகரங்கள் உருவானதும் அங்கே பல
பயணிகள் வந்து சென்றதும் பிரான்ஸின்
பாரிஸிலும், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டிலும்
இத்தாலியின் போலோக்னோவிலும்
பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டதும்
மறுமலர்ச்சியின் பிறப்புக்குத் தேவையான
தொடக்க நிலைமைகளை உருவாக்கின
துருக்கியர்களுக்கு எதிரான போரில்
மேற்கத்திய நாடுகளின் உதவியை நாடி
பைசாண்டியப் பேரரசரிடம் இருந்து ஒரு
கோரிக்கையுடன் 1393ஆம் ஆண்டில்
கான்ஸ்டான்டிநோபிளைச் சேர்ந்த பிரபல
அறிஞர் மானுவேல் கிரைசாலோரஸ்
வெனிஸ் நகரத்துக்கு சென்று சேர்ந்தார்.
பிளாரன்ஸ் பல்கலைக்கழகத்தில் கிரேக்க
இலக்கியத்தை பயிற்றுவிக்கும் பேராசிரியராக
சேருமாறு கிரைசாலோரசுக்கு பணிவாய்ப்பு
வழங்கப்பட்டது. பதினைந்தாம் நூற்றாண்டின்
தொடக்கத்தில் பைசாண்டியத்தைச் சேர்ந்த இதர
அறிஞர்களும் இத்தாலிக்கு குடிபெயர்ந்தனர்.
இந்த அறிஞர்களால் ஈர்க்கப்பட்ட இத்தாலிய
அறிஞர்கள் பைசாண்டியத்தைச் சேர்ந்த
கான்ஸ்டான்டிநோபிள் மற்றும் இதர
நகரங்களுக்கு கையெழுத்துப்பிரதிகளைத் தேடி
பயணம் மேற்கொண்டனர். 1413க்கும் 1423க்கும்
இடைப்பட்ட ஆண்டுகளில் ஜியோவனி
அவுரிஸ்பா என்ற அறிஞர் மட்டும், சோபோகில்ஸ்,
யூரிபைட்ஸ், தூசிடைட்ஸ் ஆகியோரின்
படைப்புகள் உள்பட 250 கையெழுத்துப்பிரதி
நூல்களை இத்தாலிக்கு கொண்டு வந்தார்.
1453ஆம் ஆண்டு கான்ஸ்டான்டிநோபிளின்
வீழ்ச்சிக்குப் பிறகு அங்கிருந்து வெளியேறிய
செவ்வியல் அறிஞர்கள் மேற்கத்திய
ஐரோப்பாவிற்கு சென்றதால் செவ்வியல்
படைப்புகளை கற்கும் நடவடிக்கைகள் ஊக்கம்
பெற்றன.
மறுமலர்ச்சியின் தாயகமாக இத்தாலி :
இத்தாலிய நகரங்களில் தொடங்கிய மறுமலர்ச்சி
மேற்கத்திய ஐரோப்பாவின் இதர நகரங்களுக்கு
பின்னர் பரவியது. இத்தாலியர்கள் தாங்கள்
ரோமானிய மூதாதையர்களின் வழித்தோன்றல்கள்
என்ற நம்பிக்கையைப் பாதுகாத்து வந்தனர்.
தங்கள் பாரம்பரியம் குறித்து அவர்கள் பெருமை
கொண்டார்கள். லத்தீன் கிறித்தவ உலகத்தின் இதர
பகுதிகளைக் காட்டிலும் இத்தாலியில் பெருமளவுக்கு
சமயச்சார்பின்மை கலாச்சாரம் நடைமுறையில்
இருந்தது. பழைய தேவாலயங்கள் மற்றும் ஓவியங்கள்
இருண்டதாகவும் பழைய பாரம்பரியங்கள் தொல்லை
தருவதாகவும் அவர்களுக்கு விளங்கின. தங்களுக்குப்
பிடித்தமானவற்றைத் தேடும் முயற்சியில் அவர்கள்
லத்தீன் மொழியில் எழுதப்பட்ட புத்தகங்களைக்
கண்டுபிடித்தனர். லத்தீன் மொழியை ரோமானிய
மூதாதையர்கள் எழுதியது போன்று அவர்கள்
எழுதக் கற்றுக்கொண்டனர். மேலும் கிரேக்க
மொழியையும் கற்ற அவர்கள் ஏதென்ஸ் நகர
மக்களின் அருமையான, பெரிகிளிஸ் காலத்து
படைப்புகளையும், கிரேக்க மற்றும் ரோமானிய
கலாச்சாரங்களின் கடந்த காலப் படைப்புகளையும்
கண்டுபிடித்தனர். சட்டம் மற்றும் தத்துவயியல்
படிப்புகளுக்காகவே முதன்மையாக இத்தாலிய
பல்கலைக்கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
மறுமலர்ச்சியின் தாயகமாக பிளாரன்ஸ் :
இலக்கியத்தில் மறுமலர்ச்சி :
பதின்மூன்று மற்றும் பதினான்காம்
நூற்றாண்டுகளிலேயே தாந்தே (1265-1321),
பெட்ரார்க் என்ற இரண்டு பெரும் இத்தாலிய மொழி
கவிஞர்களை பிளாரன்ஸ் உருவாக்கியிருந்தது.
இடைக்கால கலாச்சாரத்தின் சுருக்கமாக
தாந்தேயின் தெய்வீக இன்பியல் (Divine Comedy)
திகழ்கிறது. காரணங்கள் மற்றும் இறை அருள்
மூலமாக மனித குலம் இரட்சிப்பு பெறமுடியும்
என்பது அதன் மேலான கருப்பொருளாகும்.
மனிதர்களின் அன்பு, நாட்டுப்பற்று, இயற்கை
மீதான ஆர்வம் மேலும் சுதந்திரமான ஒன்றுபட்ட
இத்தாலி நாடு என பல கருப்பொருட்களையும் அது
உள்ளடக்கியிருந்தது. பெட்ரார்க் (1304-1374) லத்தீன் மற்றும்
இத்தாலிய மொழிகள் இரண்டிலும் படைப்புகளை
உருவாக்கினார். மனிதநேயவாதிகளுள்
முன்னோடியான இவர் 'இத்தாலிய மறுமலர்ச்சி
இலக்கியத்தின் தந்தை' என்று கருதப்ப டுகிறார்.
பெட்ரார்க்கின் ஆராயும் மனமும் செவ்வியல்
(கிரேக்க மற்றும் லத்தீன் மொழி) நூலாசிரியர்கள்
மீதான ஈர்ப்பும், அவரை பயணிக்க வைத்தன. அவர்
கிரேக்க மற்றும் ரோமானிய
கையெழுத்துப்பிரதிகளைத் தேடி, சமயத்துறவிகள்
நடத்திய நூலகங்களுக்கு சென்றார். சிசரோவின்
கடிதங்களை அவர் மறுபடியும் கண்டுபிடித்தது
பதினான்காம் நூற்றாண்டின் இத்தாலிய
மறுமலர்ச்சியில் முக்கிய தருணமாக கருதப்படுகிறது
நிக்கோலோ மாக்கியவல்லி (1469-1527) :
நிக்கோலோ மாக்கியவல்லியின் 'தி பிரின்ஸ்'
என்ற படைப்பு ஆட்சியாளர்களுக்கு அரசியல்
வழிகாட்டியாக அமைந்தது. தாம் ஆளும் நாட்டின்
அதிகாரம் மற்றும் பாதுகாப்பை பராமரிப்பது ஒரு
ஆட்சியாளரின் தலையாய கடமை என்று அவர்
கருத்துகொண்டிருந்தார். நீதி அல்லது கருணை
அல்லது ஒப்பந்தங்களை பின்பற்றுவது ஆகியன
இவரின் தலையாய கடமைக்கு குறுக்கே
வரக்கூடாது. ஒவ்வொரு மனிதரும் சுயநலம்
சார்ந்த நோக்கங்களைக் கொண்டிருப்பது
தி பிரின்ஸ்' என்ற நூலில் ஒரே நேரத்தில்
மனிதனாக, மிருகமாக, சிங்கமாக, நரியாக மாறத்
தெரிந்திருக்கவேண்டும் என்று மாக்கியவல்லி
கூறுகிறார். ‘எப்போது தமது செயல்பாடு தமக்கு
எதிராக மாறக்கூடும் என்று தெரியாததால் தமது
வாக்கை ஒருவர் காப்பாற்றமுடியாது; அதனால்
சொல்லவும் கூடாது. எப்போதும் நேர்மையாக
இருப்பது என்பது மிகவும் அனுகூலமற்றது; ஆனால்
பக்திமானாக, உண்மையாக மனிதநேயத்துடன்
பக்தியுடனும் இருப்பது போல் தோற்றமளிப்பது
பலனளிக்கும், நல்லொழுக்க குணம் இருப்ப து
மிகவும் பலனளிக்கும்’ என்று அவர் கூறுகிறார்.
மைக்கேல் ஆஞ்சிலோ (1475-1564) :
1460களில் பைபிளின் நாயகரான டேவிட்டின்
உண்மையான தோற்றத்தை வெளிப்படுத்தும்
சிறப்பான ஓவியத்தை முதன்முதலில் வரைந்த
ஓவியர்களில் டொனடெல்லோவும் ஒருவராவார்.
மறுமலர்ச்சி காலத்தின் மிகப்பெரிய சிற்பியான
மைக்கேல் ஆஞ்சிலோ டி லொடோவிகோ
ப்யூனரோட்டி சைமோனியை அவரின் ஆளுமை
பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியது. போப்புகளால்
கட்டப்பட்ட ரோமில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்
தேவாலயம் மைக்கேல் ஆஞ்சிலோவால் நவீனமயமானது. இந்த
செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் உள்ள
குவிமாடம், டேவிட்டின் உண்மைத் தோற்றத்தை
வெளிப்படுத்தும் சிலை, சிஸ்டைன் தேவாலயம் (சிறிய பிரார்த்தனை அரங்கு)
சுவர்களில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் ஆகியன
மறுமலர்ச்சி கால ஓவியத்தின் மிகச் சிறப்பான
உதாரணங்கள். புகழ்பெற்ற பியட்டா என்ற கன்னி
மரியாளின் சிலையையும் அவர் வடித்துள்ளார்.
கிறிஸ்து உயிரிழந்ததை அடுத்து கன்னி மரியாள்
அவரது உடலுக்கு அருகே சோகமே வடிவாக இந்த
சிலை வடிக்கப்பட்டிருக்கும். மத்திய இத்தாலியின்
கெர்ரெராவில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒரே
பளிங்குக்கல்லில் இந்த சிலை வடிக்கப்பட்டது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் :
பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து
பதினேழாம் நூற்றாண்டு வரையிலான காலத்தின்
போது அறிவியல் அதிவேக வளர்ச்சி பெற்று
அறிவியல் புரட்சிக்கு வித்திட்டது. தேவாலய
நிர்வாகம் கடவுளைக் கேள்விகேட்பது, சிந்திப்பது
மற்றும் நடைமுறைச் சோதனைகளில் மக்கள்
ஈடுபடுவதை விரும்பாததால் விஞ்ஞானிகள்
தேவாலய நிர்வாகத்தை எதிர்த்துக்கொள்ள
வேண்டியிருந்தது. போலந்து நாட்டு விஞ்ஞானியான நிக்கோலஸ்
கோபர்நிகஸ் (1473-1543), சூரியக் குடும்பத்தில்
சூரியன் மையத்தில் உள்ளது; பூமியும் இதரக்
கோள்களும் சூரியனை சுற்றிவருகின்றன என்ற
சூரியமையக் கோட்பாட்டை (heliocentric)
கண்டறிந்து வெளியிட்டார். இந்தக் கொள்கைக்கு
மாறாக பூமியை மையமாகக் (geocentric) கொண்டு
கோள்கள் செயல்பட்டதாக தேவாலய நிர்வாகம்
கருத்துகொண்டிருந்தது. தேவாலயக் கருத்துக்கு
எதிரான அனைத்தும் கிறித்தவக் கோட்பாடுகளுக்கு
எதிரானதாகக் கருதப்பட்டன. தனது வாழ்நாளின்
இறுதி வரை வான்வெளி வட்டங்களின் புரட்சி
குறித்த ஆய்வுகளை வெளியிடுவதைத்
தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தார். பூமி
சூரியனைச் சுற்றி வருவதாக வலியுறுத்திய
ஜியார்டனோ புரூனோ என்ற இத்தாலியர்
1600இல் ரோமில், தேவாலய நிர்வாகத்தால்
எரிக்கப்பட்டார். சூரியனை மையமாகக்கொண்டு கோள்கள்
சுற்றும் சூரியமையக் கோட்பாட்டுக்கு மிக
முக்கியமான வானியல் ஆதாரத்தை பிரபல
வானியல் நிபுணர் கலிலியோ கலிலி (1564-
1642) வெளியிட்டார். ஒரு தொலைநோக்கி கொண்டு
வியாழன் கிரகத்தின் செயற்கைக்கோள்கள் ,
சனிகிரகத்தின் சுற்றுவட்டங்கள், சூரியனின்
புள்ளிகள் ஆகியவற்றை அவர் கண்டுபிடித்தார்.
பாதுவா பல்கலைக்கழகத்தில் (University of Padua)
(வெனிஸ் குடியரசுப் பல்கலைக்கழகத்தில்)
மருத்துவம் மற்றும் கணிதத்துக்கானபேராசிரியராக
மெடிசி குடும்பத்தால் நியமிக்கப்பட்டார். அறிவியலை
சமயத்தில் இருந்து பிரித்து வைக்கும் முயற்சிகளை
அவர் மேற்கொண்டார். சூரியமையக்
கோட்பாட்டின்படி, சூரியனை மையமாகக் கொண்டு
கோள்கள் இயங்கும் கொள்கையை வெளியிட்ட
கோபர்நிகஸின் கருத்துகளை அவர் ஏற்றார்.
தேவாலய நிர்வாகத்துக்கு எதிரான கருத்துகளைக்
கூறியதாக வழக்கு தொடரப்பட்டு அவர்
வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.
Comments
Post a Comment