அறிமுகம் :
1947இல் இந்தியா விடுதலையடைந்தபோது
நாட்டின் பொருளாதாரம் மிகவும் வலுவற்றதாகவும்
பல பிரச்சனைகளையும் எதிர்கொண்டது.
வறுமையின் அளவு மிக அதிகமாக
இருந்தது. மக்கள் தொகையில் ஏறத்தாழ 80
விழுக்காட்டினர் கிராமப்புறங்களில் வாழ்ந்ததோடு
தங்கள் வாழ்வாதாரத்திற்காக அவர்கள்
வேளாண்மையைச் சார்ந்திருந்தனர். ஆங்கிலேயர்
ஆட்சியின்போது கைவினைத் தொழில்கள் பெரும்
பாதிப்புகளுக்கு உள்ளாகியதால் திறமைமிக்க
கைவினைஞர்கள் பலர் தங்கள் வாழ்வாதாரத்தை
இழந்தனர். இதன் விளைவாக வேளாண்
துறையில் மக்கள் நெருக்கடி அதிகமானதோடு,
வேளாண்மையிலிருந்து பெறப்படும்
தனிநபரின் தலாவருமானமும் குறைந்தது. நில
உடைமையாளர்கள் மற்றும் பயிரிடுவோர் அல்லது
விவசாயிகளுக்குமிடையே நிலவிய நிலப்பிரபுத்துவ
பிணைப்பு வேளாண்மையின் இயல்பாக இருந்தது.
இவ்விவசாயிகள் நிலவுடைமை வர்க்கத்தாரால்
சுரண்டப்பட்டனர். விடுதலைக்கு முந்தைய பதிற்றாண்டுகளில்
தொழில்துறை வளர்ச்சியடைந்திருந்தது.
ஆனால் அது மிக குறைவானதாகவே இருந்தது.
டாட்டா இரும்பு எஃகுத் தொழிற்சாலை மட்டுமே
நன்கறியப்பட்ட கனரக தொழிற்சாலையாகும்.
இதுதவிர பருத்தி நூல்நூற்றல், நெய்தல்,
வேதிப்பொருட்கள், காகிதம், சர்க்கரை, சணல்,
சிமெண்ட் ஆகியவை முக்கிய உற்பத்திப்
பொருட்களாக இருந்தன. இத்தொழில்களுக்குத்
தேவையான இயந்திரங்களைப் பொறியியல் துறை
தயாரித்துக் கொடுத்தது. இருந்தபோதிலும் இத்துறை
சிறியதாக இருந்ததோடு வேளாண்துறையில்
தேவைக்கு அதிகமாக இருந்த தொழிலாளர்களுக்கு
குறிப்பிடத்தக்க வேலைவாய்ப்பை வழங்கும்
வலுவையும் பெற்றிருக்கவில்லை. உண்மையில்
1950இல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்
தொழில் துறையின் பங்கு 13 விழுக்காடுகளாகவே
இருந்தது. நுகர்வுக்கான உற்பத்திப் பொருட்களில்
பெரும்பாலானவை இறக்குமதி செய்யப்பட்டன.
இந்தியாவில் இருந்த அந்நிய நாட்டு நிறுவனங்களின்
அலுவலகங்கள் சந்தைப்படுத்துதல், விற்பனை
ஆகியவற்றில் மட்டுமே ஈடுபட்டதேயன்றி
உற்பத்தியில் ஈடுபடவில்லை. இவ்வாறாக புதிய இந்தியஅரசு
பொருளாதாரத்தை வளர்த்தல், வேளாண்துறை
நிலைமைகளை மேம்படுத்துதல்,
உற்பத்தித் துறையை விரிவாக்கம் செய்தல்,
வேலைவாய்ப்புகளைப் பெருக்குதல், வறுமையைக்
குறைத்தல் போன்ற மாபெரும் கடமைகளை
எதிர்கொண்டது.
சமதர்ம பாணியிலான சமூகம் :
பொருளாதார வளர்ச்சியைப் பல வழிகளில்
அடையலாம். சுதந்திரமான செயல்பாட்டு
முறையைப் பின்பற்றுவது ஒரு முறையாகும்;
அதுவே முதலாளித்துவப் பாதையாகும். மற்றொன்று
சமதர்மப் பாதையைப் பின்பற்றுவதாகும். இந்தியா
இரண்டாவது பாதையைத் தேர்வுசெய்தது.
முந்தைய பாடத்தில் கூறியவாறு, இந்திய
அரசியலமைப்பின் முகவுரையில் இந்தியா “ஒரு
இறையாண்மை உடைய, சமதர்ம, மக்களாட்சி
குடியரசு” என தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமதர்ம பாணியிலான வளர்ச்சியின் நோக்கங்கள்:
ஏற்றதாழ்வுகளைக் குறைப்பது, சுரண்டலை
ஒழிப்பது, செல்வம் ஓரிடத்தில் குவிக்கப்படுவதைத்
தடுப்பது ஆகியனவாகும். சமூகநீதியானது
அனைத்து குடிமக்களும் கல்வி மற்றும் வேலை
வாய்ப்பில் சமவாய்ப்பைப் பெறுவதாகும். இது
முக்கியமாக வளர்ச்சி தொடர்பான செயல்பாடுகளில்
அரசின் செயல்திறன்மிக்க பங்கேற்பை
இன்றியமையாததாக ஆக்குகிறது. வேளாண்மையில்
சமூக மற்றும் பொருளாதார நீதியானது விவசாயிகளுக்கு
அதிகாரம் அளிக்கும் நிலச்சீர்திருத்தச்செயல்பாடுகள் மூலம்
அடையப்படுதல் வேண்டும். தொழில்துறையில் அரசு பொதுத்துறையின் கீழ்
முக்கியத் தொழில்களைஉருவாக்குவதில் செயல்திறன் மிக்க பங்கை
வகிக்கும். ஐந்தாண்டு திட்டங்களின் கீழ்,
இவையனைத்தையும் உள்ளடக்கிய முழுமையான
திட்டமிடல் மூலமே சாதிக்க வேண்டும். இச்செயல்
திட்டங்கள் சோவியத் ஒன்றியத்தின் விரைவான
பொருளாதார வளர்ச்சி அனுபவங்களிலிருந்து
பெறப்பட்டன. விரைவான வளர்ச்சியில் சோவியத்
ஒன்றியம் பெற்ற வெற்றியைகண்டு நேரு வியந்தார்,
ஆகவே இச்செயல்பாட்டுத் திட்டத்தின், அடித்தளமாக
இருந்த கருத்தியல் ‘நேருவின் சமதர்மம்’ எனக்
குறிப்பிடப்படுகிறது
வேளாண் கொள்கை :
சுதந்திரம் பெற்றபோது இந்தியாவில்
வேளாண்மையானது பல பிரச்சனைகளால்
சூழப்பெற்றிருந்தது. பொதுவாக உற்பத்தி
குறைவானதாக இருந்தது. மொத்த உணவு
தானிய உற்பத்தி நாட்டுமக்கள் அனைவருக்கும்
உணவளிக்கப் போதுமானதாக இல்லை. இதனால்
அதிக அளவிலான உணவு தானியங்களை
இறக்குமதி செய்யவேண்டியதிருந்தது. மொத்த
மக்கள் தொகையில் 80 விழுக்காட்டினர் தங்கள்
வாழ்வாதாரத்திற்கு வேளாண்மையைச்
சார்ந்திருந்தனர். இந்நிலை தானாகவே தனிநபரின்
வருமானத்தை மிகவும் குறைந்த நிலைக்குக்
கொண்டு சென்றது. இத்தகைய சூழல் “மறைமுக
வேலையின்மை” என அழைக்கப்படுகிறது.
அதாவது மக்களில் பலர் வேறு தொழில்களுக்கு
மாறி சென்றுவிட்டாலும் மொத்த உற்பத்தி அளவு
மாறாமல் இருப்பதோடு வேளாண் பணிகளைத்
தொடர்ந்து செய்ய உபரியாக உள்ள பணியாளர்கள்
உண்மையில் தேவையில்லை. ஆகவே அவர்கள்
நடைமுறையில் வேலையற்றவர்களே. கிராமப்புற
மக்களிடையே வறுமையின் அளவு மிகவும்
அதிகமாக இருப்பதோடு அவர்களில்
பெரும்பாலானோர் வட்டிக்குக் கடன்
கொடுப்போரிடம் பெருமளவு கடன் பட்டிருந்தனர்.
வேளாண்மையின் பின்தங்கிய நிலையை
இரு காரணிகளோடு தொடர்புபடுத்திப் பார்க்கலாம்.
ஒன்று நிறுவன அடிப்படையிலானது, மற்றொன்ற
தொழில்நுட்பம் சார்ந்தது. நிறுவனம் சார்ந்த
காரணிகள் என்பது, நிலவுடைமை வர்க்கத்தை
சேர்ந்தோருக்கும் விவசாயத் தொழிலாளர்
வர்க்கத்தைச் சேர்ந்தோருக்குமிடையே நிலவிய
சமூக பொருளாதார உறவுகளைக் குறிப்பதாகும்.
தொழில்நுட்பக் காரணிகள் என்பது சிறந்த
விதைகள், மேம்படுத்தப்பட்ட வேளாண்மை
முறைகள், ரசாயன உரங்களைப் பயன்படுத்துதல்,
டிராக்டர் மற்றும் அறுவடை இயந்திரம்
உள்ளிட்ட நீர்ப்பாசன வசதிகள் ஆகியவற்றோடு
தொடர்புடையனவாகும். முதலில் நிறுவனம் சார்ந்த
குறைகளைக் களைவது என முடிவெடுத்த அரசு,
வேளாண் நிலைமைகளை மேம்படுத்துவதற்காக
நிலச்சீர்திருத்தத் திட்ட நடவடிக்கைகளைத்
தொடங்கியது. இந்நடவடிக்கைகள் குறித்து அரசு சில
அடிப்படை அனுமானங்களைக் கொண்டிருந்தது.
அவை: சமூக ரீதியாக ஒரு நியாயமான முறை
உருவாக்கப்படும். அதன் பயனாக விவசாயிகள்
வலிமை பெறுவதோடு நிலங்களின் உற்பத்தித்
திறன் அதிகரிக்கும்
நிலச்சீர்திருத்தங்கள் மற்றும் கிராமப்புற மறுசீரமைப்பு :
இந்திய அரசியலமைப்பின்படி வேளாண்மை
மாநில அரசுகளின் பட்டியலில் இடம்
பெற்றுள்ளது. அதன்படி ஒவ்வொரு மாநிலமும்
தனித்தனியாக நிலச்சீர்திருத்தங்கள் தொடர்பான
சட்டங்களை இயற்றியாக வேண்டும். இவ்வாறு
நிலச்சீர்திருத்தத்தின் அடிப்படை வடிவம் அனைத்து
மாநிலங்களுக்கும் பொதுவாக இருந்தாலும், சில குறிப்பிட்ட
வகைகள் சார்ந்தநிலச்சீர்திருத்தச் சட்டங்கள் இயற்றப்படுவதில்
மாநிலங்களிடையே ஒரே சீரான தன்மையில்லை.
ஜமீன்தாரிமுறை ஒழிப்பு :
நாடு விடுதலை பெறுவதற்கு முன்னரே,
ஜமீன்தாரிமுறை ஒழிப்பு இந்திய தேசிய
காங்கிரசினுடைய அறிக்கையின் ஒரு பகுதியாக
இடம் பெற்றிருந்தது. ஜமீன்தாரி என்றால் என்ன?
ஜமீன்தார்கள் என்போர் யார்? ஜமீன்தார் என்பவர்
நிலவுடைமையாளர் வகுப்பைச் சேர்ந்தோராவர்.
ஆங்கிலேயர் ஆட்சியின் போது, நிரந்தர நிலவரித்
திட்டத்தின் கீழ் இடைத்தரகர்களாக நியமிக்கப்பட்ட
இவர்கள் நிலவரியை அரசுக்குச் செலுத்திவந்தனர்.
இவர்கள் தங்கள் நிலங்களில் விவசாயம் செய்யும்
விவசாயிகளிடமிருந்து குத்தகை வசூல் செய்து
அரசுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட ஒரு தொகையை
நிலவரியாக செலுத்தக் கடமைப்பட்டவர்கள் ஆவர்.
விவசாயிகளிடமிருந்து பெறப்படும் தொகைக்கு
ட்டபூர்வமான வரம்பு இல்லையென்பதால்
ஜமீன்தார்கள் பொதுவாக விவசாயிகளிடமிருந்து
அதிக தொகையினை வசூலித்து அவர்களை
வறிய நிலைக்கு உள்ளாக்கினர். பொதுமக்கள்
கருத்தின்படி, ஜமீன்தார்கள் எனும் இவ்வகுப்பினர்
நீதிநெறிமுறையற்றவர்கள், ஆடம்பர பிரியர்கள்,
பயனற்றவர்கள், சுயமாக சம்பாதிக்காத
வருமானத்தில் வாழ்கின்றவர்கள் என்று
கருதப்பட்டனர். அவர்களின் உரிமைகளை
ஒழிப்பதும் நிலங்களை மீட்டு விவசாயிகளுக்குத்
தருவதும் அரசின் ஒரு முக்கிய குறிக்கோளானது.
குத்தகை சீர்திருத்தம் :
இந்தியாவில் பயிரிடப்படும் மொத்த
நிலத்தில் ஏறத்தாழ 50 விழுக்காட்டு நிலங்கள்
குத்தகை முறையின் கீழிருந்தன. குத்தகை
என்பது குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ்
விவசாயிகளால் நில உரிமையாளரிடமிருந்து
நிலத்தைக் குத்தகைக்குப் பெறும் ஏற்பாட்டைக்
குறிப்பதாகும். அனைத்துக் குத்தகைதாரர்களும்
நிலமில்லா விவசாயிகள் அல்லர். பல
சிறிய நிலவுடைமையாளர்கள் ஏனைய
நிலவுடைமையாளர்களால் குத்தகைக்கு
விடப்படும் நிலங்களைக் கூடுதலாகப் பெற்று
விவசாயம் செய்யவிரும்பினர். சில பணம்படைத்த
நிலவுடைமையாளர்களும் கூடுதலாக
நிலங்களைக் குத்தகைக்குப் பெற்று விவசாயம்
செய்தனர். பொதுவாகக் குத்தகை என்பது
பொருளாக, நிலத்தில் விளைந்த விளைச்சலில்
குறிப்பிட்ட பங்காகப் பெறப்பட்டது.
பெரும் நிலஉடமையாளர்கள் நிலத்தை
குத்தகைதாரர்களுக்கு குத்தகைக்கு விடுவது
என்பதை சாதாரணமாக செய்துவந்தனர்.
வழக்கமாக குத்தகை ஏற்பாடுகள் நீண்ட
காலத்திற்குத் தொடர்ந்தது. நிலத்தின்
சொந்தக்காரரால் பெறப்பட்ட குத்தகையானது
நிலத்தின் விளைச்சலில் 50 விழுக்காடாகவோ
அல்லது அதற்கு அதிகமாகவோ இருந்தது. இது
மிக அதிகமாகும். குத்தகை ஒரு வழக்கமான
நடவடிக்கையாதலால் ஒப்பந்தங்கள் அரிதாகவே
பதிவு செய்யப்பட்டன. இவ்வாறு நீண்டகாலக்
குத்தகைதாரர்கள் அனைவருக்கும் குத்தகை
உரிமைகள் ஒருபோதும் மறுக்கப்பட்டதில்லை.
எனினும் குத்தகைதாரர்கள் குறுகியகால
அவகாசத்தில் தாங்கள் வெளியேற்றப்படலாம்
என்பதால் அவர்கள் எப்போதும் ஓரளவு நிச்சயமற்ற
நிலைமையிலேயே வாழ்ந்தனர்.
நில உச்சவரம்பு :
நில உச்சவரம்பு என்பது தனிநபர்கள்
அதிகபட்சம் எவ்வளவு நிலங்களைச்
சொந்தமாக வைத்துக்கொள்ளலாம் என்பதை
குறிப்பிடுகின்றது. இதனை நடைமுறைப்படுத்த
1950களுக்குப் பின்னர் சட்டங்கள் இயற்றப்பட்டன.
தமிழ்நாட்டில் முதன்முறையாக 1961இல்
நடைமுறைப்படுத்தப்பட்டது. 1972 வரை ஒரு ‘நில
உரிமையாளர்’ எவ்வளவு நிலங்களைச் சொந்தமாக
வைத்துக் கொள்ளலாம் என்பதற்கு உச்சவரம்பு
நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. 1972க்குப் பின்னர்
அடிப்படை அலகானது ‘குடும்பம்’ என மாற்றப்பட்டது.
இதனால் நில உரிமையாளர் தனது குடும்ப
உறுப்பினர் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட
அளவு நிலங்களுக்கு உரிமையுடையவர்கள் என
உரிமைகோர முடிந்தது. அந்நிலங்களின் அளவு
நில உச்சவரம்பு நிர்ணயம் செய்த நிலத்தின்
அளவைவிட மிகக் குறைவாகவே இருந்தது.
நிலத்தின் தரம் ஒரேமாதிரியாக இல்லாததால்
நில உச்சவரம்புச் சட்டத்தின் கீழ் நிலங்களின்
அளவை நிர்ணயம் செய்வது சிக்கல்கள் நிறைந்த
பணியாக இருந்தது. நீர்ப்பாசன நிலங்கள், மானாவரி
நிலங்கள், ஒருபோக நிலங்கள் மற்றும் இருபோக
நிலங்கள் ஆகியனவற்றை வேறுபடுத்திப் பார்க்க
வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதே சமயத்தில்
இச்சட்டத்தில் சிலவகையான நிலங்களுக்கு
விதிவிலக்கும் அளிக்கப்படிருந்தன. அவையாவன,
பழத்தோட்டங்கள், தோட்டங்கள் (காய்கறிகள்,
பூக்கள் விளையும் நிலங்கள்), மேய்ச்சல் நிலங்கள்,
அறக்கொடை, சமயம் சார்ந்த நிறுவனங்களுக்குச்
சொந்தமான நிலங்கள், கரும்பு பயிரிடப்படும்
பெருந்தோட்டங்கள் ஆகியவை இதில் அடங்கும்.
மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்க வேண்டிய
இந்த சீர்திருத்தம் நில உச்சவரம்புச் சட்டத்தில்
வழங்கப்பட்ட சில விதிவிலக்குகளை சிலர்
பயன்படுத்திய விதம் குறித்தும் நில ஆவணங்கள்
திருத்தம் குறித்தும் விமர்சனங்கள் எழுந்தன.
வேளாண்மையின் வளர்ச்சி :
1960களின் இடைப்பகுதியில் இந்தியாவில்
உணவு உற்பத்தியின் நிலை மிகவும்
கவலையளிப்பதாக இருந்தது. உணவுப்
பொருட்களை இறக்குமதி செய்வதற்காக நாடு மிகப்
பெருமளவில் செலவு செய்தது. நிலச்சீர்திருத்தங்கள்
விவசாய உற்பத்தியின் மீது எவ்விதத் தாக்கத்தையும்
ஏற்படுத்தவில்லை. ஆகவே அரசு வேளாண்மையை
மேம்படுத்த தொழில்நுட்பம் எனும் மாற்று வழிகளை
நாடின. 1965இல் நீர்ப்பாசன வசதியுள்ள சில
தேர்ந்தெடுக்கப் பகுதிகளில் அதிக மகசூலைத்தருகிற
(உயர்ரக வீரிய வித்துகள் - HYV) கோதுமை, நெல்
ஆகியன பயிரிடப்பட்டன.மரபுசார்ந்த விவசாயத்தைப் போலல்லாமல்,
அதிக மகசூலைத் தருகிற விதை ரகங்களுக்கு
அதிக நீரும் டிராக்டர் போன்ற இயந்திரங்களும்
இரசாயன உரங்கள் மற்றும் பூச்சி கொல்லி
மருந்துகள் ஆகியன தேவைப்பட்டன.
தொடக்கத்தில் சோதனைமுயற்சித் திட்டங்களில்
கிடைத்த வெற்றியின் விளைவாக நாடு முழுவதும்
அதிக விளைச்சலைத் தருகின்ற வீரிய விதைகள்
பயன்படுத்தப்பட்டன. பொதுவாக இம்முயற்சி
பசுமைப் புரட்சி என்றே குறிப்பிடப்படுகிறது.
இம்முறையில் இரசாயன உரங்களுக்கும்
பூச்சிகொல்லி மருந்துகளுக்குமான தேவை மிகப்
பெருமளவுக்கு அதிகரித்தால் அவை தொடர்பான
தொழிற்சாலைகளும் வளர்ச்சி பெற்றன.
Comments
Post a Comment