அறிமுகம் :
இரண்டாம் உலகப்போரின் துவக்கமும் அதை
தொடர்ந்து, மாகாணங்களில் வீற்றிருந்த காங்கிரஸ்
அமைச்சரவைகளின் ஒப்புதல் பெறாமல் பிரிட்டிஷார்
இந்தியாவைப் போரில் பங்கெடுக்க முடிவுசெய்தமையும்
இந்திய தேசிய காங்கிரசையும் காந்தியடிகளையும்
அரசியல்ரீதியாகத் தூண்டும் வகையில் அமைந்தது.
தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்யும் விதமாக காங்கிரஸ்
அமைச்சர்கள் பதவி துறந்தனர். காந்தியடிகள்
அக்டோபர் 1940இல் தனிநபர் சத்தியாகிரகத்தைத்
துவங்கியதன் மூலமாக காங்கிரஸ் இயக்கத்தின்
மனவலிமையை உறுதிப்படுத்தினார். இதற்கிடையே,
இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக சுபாஷ்
சந்திர போஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது காந்தியடிகளை
அதிர்ச்சியில் ஆழ்த்தியதால் சுபாஷ் தம் பதவியைத்
துறந்தார். பின்னர் ஃபார்வர்ட் பிளாக் கட்சியைத்
துவக்கினார். பிரிட்டிஷாரின் கைது நடவடிக்கையால்
சுபாஷ் ஜெர்மனி மற்றும் சிங்கப்பூருக்கு தப்பிச் சென்று
அங்கு இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கி
காங்கிரஸ் இயக்கத்திலிருந்து தனித்துப் புரட்சிகர
நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.அதிருப்தியிலிருந்த தேசியவாதிகளை
அரவணைக்கும் பொருட்டு மார்ச் 1942இல் கிரிப்ஸ்
தூதுக்குழு வருகைபுரிந்தது. ஆனால், அதன்
முன்மொழிவில் எந்தப் பலனும் இருப்பதாகத் தெரியவில்லை. காந்தியடிகள் ஆகஸ்ட் 1942இல்
‘வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை’
நடத்த முடிவு செய்தார். ஆனால் பிரிட்டிஷாரோ
காங்கிரசின் அனைத்துத் தலைவர்களையும்
கைது செய்ததோடு, இயக்கத்தையும்
இரும்புக்கரங்கொண்டு அடக்கினர். காந்தியடிகள்
மே 1944 வரை சிறையில் கடும் நெருக்கடிகளுக்கு
உட்படுத்தப்பட்டார். அதன்பின் வந்தஅமைச்சரவைத்
தூதுக்குழுவின் திட்டம் காங்கிரசாருக்கு ஏற்றுக்
கொள்ளக்கூடியதாக இருந்தது. எனினும்,
பாகிஸ்தானின் உருவாக்கத்தை எதிர்பார்த்த
ஜின்னாவும் அவர்தம் முஸ்லிம் லீக் கட்சியும் ‘நேரடி
நடவடிக்கை நாள்’ என்று விடுத்த அறைகூவலில்
கிழக்கு வங்காளத்தில் வன்முறை வெடித்துக்
கிளம்பியது. கலவர பூமியாக மாறியிருந்த
நவகாளியில் இருந்து காந்தியடிகள் தமது அமைதிப்
பயணத்தைத் துவக்கினார். இராஜாஜியின் சமரச
முயற்சியும் வேவல் திட்டமும் அதை நிறைவேற்றும்
பொருட்டு கூடிய சிம்லா மாநாடும் பேச்சுவார்த்தை
முடக்கத்தைச் சரி செய்ய தவறின. இதற்கிடையே,
இராயல் இந்தியக் கடற்படை, கலகத்தில்
ஈடுபட்டமை பிரிட்டிஷாரை வேகமாக விடுதலை
வழங்கத் துரிதப்படுத்தியது. விடுதலை வழங்கவும்
இந்தியா-பாகிஸ்தான் என்று இத்துணைக்கண்டம்
பிரிக்கப்படுவதை மேற்பார்வையிடவும் மௌண்ட்
பேட்டன் அரசப்பிரதிநிதி நியமிக்கப்பட்டார்.
தனிநபர் சத்தியாகிரகம் :
இதற்கு முன்பு பெருவாரியான மக்களை
உள்ளடக்கிய இயக்கங்களை நடத்திவந்த
காந்தியடிகள், சர்வாதிகாரத்திற்கு எதிரான
போரை வலுவிழக்கச் செய்யாமலிருக்கத் தனிநபர்
சத்தியாகிரகம் என்ற வழியைக் கைக்கொண்டார்.
காந்தியடிகளால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட
சத்தியாகிரகிகளை அவர்களின் பேச்சுரிமையை
மையப்படுத்தி போருக்கு எதிரானப் பிரச்சாரத்தை
மேற்கொள்ள தூண்டினார். தேர்ந்தெடுக்கப்பட்ட
சத்தியாகிரகிகள் தாங்கள் பிரச்சாரம் மேற்கொள்ளும்
தேதி, நேரம், இடம் போன்ற தகவல்களை மாவட்ட
நீதிபதிக்குத் தெரிவித்துவிட வரையறுக்கப்பட்டது.
குறித்த நேரத்தில் சரியான இடத்தை வந்தடைந்த
சத்தியாகிரகிகள் முழங்க வேண்டியதாவது:
“பிரிட்டிஷாரின் போர் முயற்சிக்கு மனிதசக்தியாகவோ
பணமாகவோ உதவிபுரிதல் தவறாகும். ஒரே
உருப்படியான செய்கை என்பது வன்முறையைக்
கைக்கொள்ளாமல் எல்லாவிதத்திலும் போர்
முயற்சிகளை எதிர்ப்பதேயாகும்.” இவ்வாறு பிரச்சாரம்
செய்வதன் மூலம் கைதாவது அடுத்தகட்டமாகும்.வினோபா பாவே மகாராஷ்டிரத்தில் அமைந்த
தனது பாவ்னர் ஆசிரமத்தருகே 1940 அக்டோபர் 17இல்
முதல் சத்தியாகிரகத்தை நடத்தியதின் வாயிலாக
இவ்வியக்கம் தொடங்கப் பெற்றது. காந்தியடிகள்
டிசம்பர் 1940இல் இவ்வியக்கம் முடிவுக்கு வந்ததாக
அறிவித்தார். மேற்கொண்டு சில மாற்றங்களுக்கு
உட்படுத்தப்பட்ட பின் மீண்டும் ஜனவரி 1941இல்
குழு சத்தியாகிரகமாக உருவெடுத்தபோதும் அதை
ஆகஸ்ட் 1941இல் திரும்பப் பெறுவதாக அறிவித்தார்
ஆகஸ்ட் கொடை :
தனிநபர் சத்தியாகிரகம் என்பது அரசபிரதிநிதி
லின்லித்கோ பிரபுவின் ஆகஸ்ட் கொடைக்கு
காங்கிரஸ் கொடுத்த பதிலடியாகும். லின்லித்கோ
பிரபு 1940 ஆகஸ்ட் 8இல் அளிக்க முன்வந்ததாவது:
வரையறுக்கப்படாத ஒரு தேதியில் டொமினியன்
அந்தஸ்து, அதிகமான இந்தியர்களைக் கொண்டு
அரசபிரதிநிதியின் குழுவை (செயற்குழு)
விரிவாக்கம் செய்தல், இந்திய உறுப்பினர்களைக்கொண்ட
போர் ஆலோசனைக் குழுவை உருவாக்குதல்,
சிறுபான்மையினரின் உரிமைகளை அங்கீகரித்தல்,
போருக்குப் பின் இந்திய மக்கள் தங்களுக்கென்ற ஒரு
அரசியல் சாசனத்தை இயற்ற உள்ள உரிமையை ஏற்று அதற்கு எதிர்காலத்தில்
வாய்ப்பளிக்க உறுதியளித்தல் ஆகியவையாகும்.
காங்கிரஸில் இருந்து போஸ் நீக்கப்படுதல் :
ஆகஸ்ட் கொடை மிகத்தாமதமாக
அறிவிக்கப்பட்டதால் அது குறித்துப் பேச்சு வார்த்தை
நடத்தக் கூட காங்கிரசுக்கு நேரமில்லை.
இக்காலகட்டத்தில் காங்கிரசும் தனது ஆதரவாளர்
பின்புலத்தை வெகுவாக இழந்திருந்தது. அதன்
உறுப்பினர் எண்ணிக்கை 1938-39இல் 4.5
மில்லியன் என்ற நிலையிலிருந்து 1940-41இல்
1.4 மில்லியன் என்ற அளவுக்குச் சரிந்திருந்தது.
காங்கிரசிற்குள் சுபாஷ் சந்திர போஸ்
ஓரங்கட்டப்பட்டதால் அவ்வமைப்பின் முக்கிய
மேல்மட்டத் தலைவர்கள் அவரோடு ஒத்துழைக்க
மறுத்தனர். அதனால் கல்கத்தாவில் கூடிய
அனைத்து இந்திய காங்கிரஸ் கூட்டத்தில்
போஸ் பதவித் துறப்பு செய்யவே, இராஜேந்திரப்
பிரசாத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
போஸ் காங்கிரசிற்குள் செயலாற்ற விரும்பி
ஃபார்வர்டு பிளாக் கட்சியை உருவாக்கினாலும்,
ஆகஸ்ட் 1939இல் அவர் காங்கிரசின் அனைத்துப்
பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார்
லாகூர் தீர்மானம் :
ஒருபுறம், தேதி அறிவிக்கப்படாத
டொமினியன் அந்தஸ்து என்ற நிலைக்கும்
போரில் பங்கெடுத்தால் அதன் முடிவிற்குப் பின்
விடுதலை வழங்க வலியுறுத்திய இந்தியர்களின்
நிலைப்பாட்டிற்கிடையே சுமூகமான தீர்வை
எட்ட அனுமதிக்காத காலனிய அராஜகப்போக்கு
சிக்கலை ஏற்படுத்திக் கொண்டிருந்தது என்றால்
மறுபுறம் வேறொரு சிக்கல் முளைத்தது.
அது இஸ்லாமியர்களுக்கான தனிநாடு
கோரிக்கையாகும். இதன் துவக்கம் 1930களில்
கிழக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவில் தனிப்பகுதி
அல்லது சில பகுதிகள் என்ற நிலையிலிருந்து
1940 மார்ச் 23இல் லாகூரில் நிறைவேற்றப்பட்ட
தீர்மானம் மூலம் இது ஒரு முக்கியக் கட்டத்தை
எட்டியது.இத்தகைய கோரிக்கையை முஸ்லிம் லீக்
கட்சியும் அதன் ஆதரவாளர்களும் முன்வைக்க காலனி
ஆட்சியாளர்களே தூண்டுதலாக இருந்ததற்கான
ஆதாரங்கள் வெகுவாக உள்ளன. இத்தீர்மானத்தின்
மூலம் பிரிட்டிஷார் போர் நடவடிக்கைகளில்
காங்கிரசின் ஆதரவை வேண்டியபோதும்
அவர்களோடு பேச்சுவார்த்தையை நிராகரிக்க ஒரு
தெம்பை ஏற்படுத்திக் கொடுத்தது.
அமைப்புரீதியில் காங்கிரஸ் இக்கால
கட்டத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில்
வலுவிழந்து காணப்பட்டது. அதன் தலைவர்கள்
அச்சு நாடுகளின் – ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் – கொள்கைக்கு
எதிரான பிரிட்டிஷாரின் போர்
என்பதால் தங்கள் ஆதரவை சர்வாதிகாரத்திற்கு
எதிராகவும் மக்களாட்சியைப் பாதுகாக்கும்
பொருட்டும் உறுதிசெய்ய வேண்டிய நிலை
இருப்பதை உணர்ந்தனர். போஸ் ஒருவர் மட்டுமே
நேசநாடுகளோடு ஒத்துழையாமல் அச்சு நாடுகளை
ஆதரித்தார். இவையெல்லாம் 1940இன் முக்கிய
போக்குகளாகும். ஜப்பான் தென்கிழக்கு ஆசியப்
பகுதியில் முன்னேறி வந்ததும் பிரிட்டிஷ் படைகளின்
வீழ்ச்சியும் நிலைமையைப் பெரிதும் மாற்றின.
இதனால் விடுதலைக்கு ஒப்புதல் வழங்காமலேயே
போர் முயற்சிகளில் இந்தியர்களின் ஒத்துழைப்பைப்
பெறவேண்டிய அவசரமான சூழல் உதித்தது.
போர்க்கால அமைச்சரவையைத் தலைமையேற்று
நடத்திக்கொண்டிருந்த வின்ஸ்டன் சர்ச்சில்,
சர் ஸ்டாஃப்போர்டு கிரிப்ஸை காங்கிரசோடு
பேச்சுவார்த்தை நடத்த அனுப்பிவைத்தார்.
கிரிப்ஸ் தூதுக்குழு :
நேச நாடுகளுக்கு 1941ஆம் ஆண்டு
மோசமானதாக விளங்கியது. பிரான்ஸ், போலந்து,
பெல்ஜியம், நார்வே, ஹாலந்து ஆகிய நாடுகள்
ஜெர்மனி வசம் சிக்கியதோடு பிரிட்டனும் பல
பின்னடைவுகளை எதிர்கொண்டது. அவற்றுள்
மிக முக்கியமானதாகக் கருதப்படுவது தென்கிழக்கு
ஆசியாவிற்குள் ஜப்பான் படைநடத்திச்
சென்றதேயாகும். இந்நிகழ்வு முத்துத் துறைமுகம்
(Pearl Harbour) என்ற அமெரிக்க துறைமுகம்
1941 டிசம்பர் 7இல் தாக்கப்பட்ட சமகாலத்தில்
நடந்தேறியது. அமெரிக்க அதிபரான ரூஸ்வெல்டும்,
சீனக் குடியரசுத்தலைவரான ஷியாங் கே-
ஷேக்கும் ஜப்பானின் அதிரடிப்போக்கை நிறுத்த
முனைந்தனர். அவர்களின் கண்காணிப்பு
கவனத்திற்குள் இந்தியா சென்றதால், அவர்கள்
பிரதமர் சர்ச்சிலை இந்திய மக்களின் முழு
ஒத்துழைப்பைப் பெறக்கோரி அழுத்தம்
கொடுத்தனர்.ஜப்பானியப் படைகள் 1941இன் முடிவில்
பிலிப்பைன்ஸ், இந்தோ-சீனா, இந்தோனேசியா,
மலேசியா, பர்மா போன்ற பகுதிகளை மண்டியிட
வைத்து இந்தியாவின் வடகிழக்கு எல்லை வழியாக
நுழையத் தயாராயின. தென்கிழக்கு ஆசியாவின்
வீழ்ச்சி பிரிட்டிஷாரையும், இந்திய தேசிய
காங்கிரசையும் கவலைகொள்ளச்செய்தது. பிரிட்டிஷ்
படைகள் எதிர்த்து நிற்கமுடியாமல் ஓடிப் போயின.
பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தின் இந்திய வீரர்கள்
ஜப்பானியப் படைகளின் தயவில் விடப்பட்டனர்.
பின்னர் உருவான இந்திய தேசிய இராணுவம்
இந்நிலையில் இருந்தே கட்டியெழுப்பப்பட்டது. அது
பற்றி விரிவாக இப்பாடத்தில் காண்போம் (தொகுதி
7.3). சர்ச்சில் கல்கத்தாவும், மதராசும் ஜப்பானியர்
பிடியில் விழக்கூடும் என்று அஞ்சினார். காங்கிரஸ்
தலைவர்களும் அவ்வாறே அச்சம் கொண்டதால்
போர் நடவடிக்கைகளில் ஒத்துழைக்க
வழிவகை செய்யும் ஒரு கௌரவமான வாய்ப்பை
எதிர்பார்த்திருந்தனர் இச்சூழலில் டிசம்பர் 1941இல் கூடிய காங்கிரஸ்
செயற்குழு போருக்குப் பின் விடுதலையையும்,
உடனடியாக முக்கியப் பிரிவுகளில் அதிகாரப்
பகிர்வையும் உறுதியளிக்க பிரிட்டிஷ் அரசு
முன்வந்தால் தாங்கள் ஒத்துழைப்பு நல்கத் தயார்
என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது.'
கிரிப்ஸ் வருகை :
சர் ஸ்டாஃபோர்டு கிரிப்ஸ் தலைமையிலான
பிரதிநிதித்துவக் குழு மார்ச் 1942இல் இந்தியா
வந்தடைந்தது. சர்ச்சிலின் போர்க்கால
அமைச்சரவையில் தொழிலாளர் கட்சியின்
சார்பில் பங்கு வகித்தமையே கிரிப்ஸ் குழு மீது
நம்பிக்கையை ஏற்படுத்தியது. இந்தியாவிற்குப்
புறப்படும் முன்பாக அவர் பிரிட்டிஷாரின் கொள்கை
நிலைப்பாடு இந்தியாவைப் பொறுத்தமட்டில்
‘விரைவில் சுயாட்சியை உணர்த்தும்
அரசுமுறையை நிறுவுதல்’ என்று மொழிந்திருந்தார்.
ஆனால் அவர் பேச்சுவார்த்தையைத்
துவக்குவதற்கு முன்பாக வெளியிட்ட வரைவில்
விடுதலை பற்றிய உறுதியான நிலைப்பாடு ஏதும்
இருக்கவில்லை.
கிரிப்ஸின் முன்மொழிவு :
கிரிப்ஸ் டொமினியன் அந்தஸ்தையும் போருக்குப்
பின் அரசியல் சாசன வரைவுக்குழுவை
உருவாக்குதலையும்ஆதரித்தார். அரசியல்
சாசன வரைவுக் குழு மாகாண சபைகளில்
தேர்ந்தெடுக்கப்பட்ட வர்களைக்
கொண்டும் சுதேச அரசர்கள் கட்டுப்பாட்டில் இருந்த
பகுதிகளில் இருந்து நியமிக்கப்பட்டவர்களைக்
கொண்டும் ஏற்படுத்தப்படும் என்று
சொல்லப்பட்டிருந்தது. மேலும் அதில் பாகிஸ்தான்
பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஏதாவது ஒரு
மாகாணத்திற்குப் புதிய அரசியல் சாசனத்தைஏற்றுக்
கொள்ளத் தயக்கமிருந்தால், அம்மாகாணம் தனது
எதிர்காலத்தை நிர்ணயிக்க பிரிட்டிஷ் அரசோடு
தனிப்பட்ட ஒப்பந்தம் ஏற்படுத்த உரிமை இருப்பதாகக்
கிரிப்ஸ் முன்மொழிவு அறிவித்தது. இவ்வரைவு
பழைய வரைவுகளிலிருந்து எந்த மாற்றத்தையும்
உள்ளடக்கியதாக யாருக்கும் தெரியவில்லை.
இது பற்றி பின்னர் நேரு குறிப்பிடுகையில், “நான்
முதன்முறையாக இவ்வரைவை வாசித்த போது,
கடுமையான மன அழுத்தத்திற்கு உட்பட்டேன்”
என்றார்.
கிரிப்ஸின் முன்மொழிவு நிராகரிக்கப்படல் :
டொமினியன் அந்தஸ்து வழங்குவதென்பது
ஏமாற்றமளிக்கக் கூடிய குறுகிய
நடவடிக்கையாகும். மேலும் அரசியல் சாசன
வரைவுக்குழுவில் பங்கெடுக்கும் சுதேசி அரசாட்சி
நடைபெற்ற மாகாணங்களைச் சேர்ந்தோ ர்
பிற மாகாணங்களைப் போல் மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு மாற்றாக
உறுப்பினர்களால் நியமிக்கப்படும் முறையை
காங்கிரஸ் நிராகரித்தது. இவை அனைத்துக்கும்
மேலாக ஓங்கி நின்றது இந்தியப் பிரிவினை
பற்றிய குழப்பமாகும். அதனால் பேச்சுவார்த்தை
தோல்வி அடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டு
அவ்வாறே நிகழ்ந்தது
வெள்ளையனே வெளியேறு இயக்கம் :
காந்தியடிகள் மே 1942இல் இந்திய தேசிய காங்கிரசை
அடுத்தகட்ட செயல்பாட்டிற்குத் தயார்படுத்தலானார். இம்முறை,
பெரும் மக்கள் போராட்டத்தைமுன்னெடுக்க காந்தியடிகள்
முனைந்த நேரத்தில் இராஜாஜியும் நேருவும் தயக்கம் காட்டினர். ஒரு
போராட்டத்திற்கு உகந்த சூழல் உருவாகி இருந்தது.
பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்ததோடு
உணவு தானியங்களுக்குக் கடும் தட்டுப்பாடும்
ஏற்பட்டது
காங்கிரசின் வார்தா கூட்டம். :
இப்பின்புலத்தில் இந்திய தேசிய காங்கிரசின்
செயற்குழு 1942 ஜூலை 14இல் வார்தாவில்
சந்தித்தது. இக்கூட்டத்தில் நாடு தழுவிய சட்ட
மறுப்புப் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
இத்தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள மறுத்த
இராஜாஜியும் புலாபாய் தேசாயும் காங்கிரஸ்
செயற்குழுவில் இருந்து பதவித் துறப்பு
செய்தனர். நேருவும் அதே நிலைப்பாட்டைக்
கொண்டிருந்தபோதும் செயற்குழுவின்
பெரும்பான்மை முடிவுக்குக் கட்டுப்பட்டார்.
வெள்ளையனே வெளியேறு போராட்டங்கள் :
காலனிய அரசு தாமதிக்காமல் காந்தியடிகள்
உட்பட அனைத்துக் காங்கிரஸ் தலைவர்களையும்
1942 ஆகஸ்ட் 9 அன்று அதிகாலையில்
கைதுசெய்து சிறையில் தள்ளியது. இந்தியமக்களும்
தாமதிக்கவில்லை. விடியலின் முன்பே நடந்த
கைது நடவடிக்கைகளைக் கண்டிக்கும் வகையில்
அனைத்து மாகாணங்களிலும் கடையடைப்புகளும்
காவல்துறையினரோடு வன்முறை மோதலும்
பதிலடியாகத் தரப்பட்டது. இந்தியா முழுமையிலும்
தொழிலாளிகள் வேலைநிறுத்த போராட்டத்தில்
இறங்கினர். ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா எஃகு
தொழிற்சாலையில் வேலை நிறுத்தப் போராட்டம்
ஆகஸ்ட் 20இல் துவங்கி 13 நாட்கள் நடைபெற்றது.
அகமதாபாத்தின் ஜவுளித் தொழிற்சாலை
ஊழியர்கள் மூன்று மாதங்களுக்கும் மேலாக
வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியாவில் தொழிற்சாலைகளைக் கொண்ட
அனைத்து நகர்ப்புறங்களும் சிறிது காலமாவது
வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டன.
Comments
Post a Comment