அறிமுகம் :
முதல் உலகப்போருக்குப் பின் கூட்டுப்
பாதுகாப்பை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட
பன்னாட்டு அமைப்பு தகர்ந்தது. 1939 செப்டம்பரில்
ஐரோப்பா, மீண்டும் ஒரு பெரும் போரை
எதிர்கொண்டது. 1939 முதல் 1945 வரை
நடந்த போர், இதற்குமுன் 1914 முதல் 1918
வரை நடந்த உலகப்போரை விஞ்சியதாக
இருந்தது. இதற்கு ஜப்பான் எடுத்த நிலைப்பாடும்
முக்கியக் காரணங்களில் ஒன்றாகும். அதன்
விளைவாக கடுமையான அளவிற்கு உயிரிழப்பும்,
பொருள் சேதமும், போர்செலவினங்களும்
ஏற்பட்டது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்
காலனிய நாடுகளில் ஒரு கொந்தளிப்பு ஏற்பட்டு
தேசியவாத கிளர்ச்சிகள் சூடுபிடித்தன. இதனால்
ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் காலனியாதிக்க
நீக்கம் தொடங்கியது. தென்கிழக்கு ஆசியாவில்,
டச்சு ஒரு தோல்வியுற்ற போரை நடத்தியது,
ஆனால் இறுதியாக முந்தைய டச்சு காலனி
நாடாக இருந்த கிழக்கிந்தியத் தீவுகளான
இந்தோனேசியாவுக்கு 1949இல் விடுதலை
அறிவிக்கப்பட்டது. இப்பாடம் இந்தோனேசியாவிலும்,
அமெரிக்க காலனியான பிலிப்பைன்ஸ் நாட்டிலும்
ஏற்பட்ட முன்னேற்றங்களை அணுகுபொருளாக
எடுத்துவிளக்குகிறது. சீனாவில் ஊழல்வாதிகளும்,
திறமையற்றவர்களுமாக இருந்த தேசியவாதிகளை
மக்கள் புறந்தள்ளினார்கள். அங்கு நடந்த உள்நாட்டுப்
போரின் விளைவாகமாசே-துங்கின் தலைமையில்
சீன மக்கள் குடியரசு உருவாக வழிவகுத்தது.
இரண்டாம் உலகப்போர்:காரணங்கள் :
போரின் துவக்கத்தில் பிரிட்டனும், பிரான்சும்
ஜெர்மனியை எதிர்த்ததும் இத்தாலி துவக்கத்தில்
நடுநிலைவகித்து பின் ஜெர்மனியை ஆதரித்ததும்
கொடுத்த தோற்றமானது முதல் உலகப்போரின் இரு
அணிகளை நினைவூட்டக்கூடியதாக விளங்கியது.
குறிப்பிடத்தக்க வேறுபாடு என்னவென்றால்,
ஜப்பான் மேற்கத்திய சக்திகளுக்குப் பதிலாக
ஜெர்மனியுடன் இணைந்தது. போர் தொடங்கி
இரண்டு ஆண்டுகள் கடக்கும் வரை ரஷ்யாவும்,
அமெரிக்கா ஐக்கிய நாடும் எந்த ஒரு பிரச்சனையிலும்
தலையிடவில்லை. இரண்டாம் உலகப்போரின்
காலத்தில் போர்முறைகள் பெரும் மாற்றத்திற்கு
உள்ளாகியிருந்தன. அகழியை அடிப்படை
உத்தியாக கொண்ட போர்முறை மறைந்து
வான்வெளி குண்டு வீசும் முறை ஆக்கிரமித்தது.
போருக்காக ஆயுதம் ஏந்தியோரையும், சாதாரண
குடிமக்களையும் இரண்டாம் உலகப்போர்
பிரித்துப் பார்க்கத் தவறியது. அதனால் போரினால்
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மிக அதிகமாகவே
இருந்தது.
பன்னாட்டு சங்கத்தின் (League of Nations) தோல்வி :
மற்றொரு போரைத் தவிர்க்கும் நோக்கோடு
பன்னாட்டு அமைப்பாக உருவாக்கப்பட்ட
பன்னாட்டு சங்கம் காலப்போக்கில் வெற்றி
பெற்றவர்களின் கூட்டணியானதோடு அது
தோல்வியடைந்தவர்களுக்கு எதிரானதாகவும்
தோன்றத் துவங்கியது. வெர்செய்ல்ஸ் ஒப்பந்தம்
கையெழுத்தானபோதே அடுத்த போருக்கான
விதைகள் தூவப்பட்டன. 1918 முதல் 1933 வரையிலான காலத்தில்
போரைத் தவிர்க்கும் எண்ணத்தோடு
தொடர் மாநாடுகள் நடத்தப்பட்டது. ஐரோப்பிய
சக்திகள் 1925இல் ஸ்விஸ் நாட்டின் நகரான
லோக்கர்னோவில் கூடி பேசியபோது ஜெர்மனியும்
பிரான்சும் வெர்செய்ல்ஸ் ஒப்பந்தத்தில் உள்ளபடி
ரைன் எல்லையை மதித்து நடக்க ஒப்புக்கொண்டன.
இதற்கு அடுத்ததாகப் பலவகையிலும்
பாராட்டப்பட்டது 1928இல் கையெழுத்திடப்பட்ட
கெல்லாக்-பிரையாண்ட் (Kellogg-Briand) ஒப்பந்தம்
ஆகும். அக்காலகட்டத்தில் பன்னாட்டு சங்கத்தில்
அமெரிக்க ஐக்கிய நாடு உறுப்பினராகவில்லை
என்றபோதும் அது கூட்டத்தில் கலந்து கொண்டது.
இவ்வுடன்படிக்கையின் விளைவாக உலக
நாடுகள் அனைத்தும் ‘போரை கைவிடுவது
என்பதை தங்களின் தேசிய கொள்கையாக’
ஏற்க உறுதிமொழி எடுத்துக்கொண்டன. ஆனால்
இவ்வுறுதிமொழியை பின்பற்றாத நாடுகள் மீது
நடவடிக்கை எடுக்குமளவிற்கு பன்னாட்டு சங்கம்
அதிகாரம் கொண்டிருக்கவில்லை.
ஹிட்லர் பதவியேற்ற 1933ஆம் ஆண்டு
ஜெனீவாவில் பன்னாட்டு சங்கம் ஆயுதக்குறைப்பு
மாநாடு ஒன்றை நடத்தியது. பிரான்சிற்கு
இணையாக ஜெர்மனியும் மறுஆயுதமயமாக்கல்
கோரிக்கை விடுத்ததே பிரச்சனையாக எழுந்தது.
பிரெஞ்சுக்காரர்கள் இந்த கோரிக்கைக்கு உடன்பட
மறுத்துவிட்டனர், அதே நேரத்தில் பிரிட்டன்
ஜெர்மனியின் கோரிக்கையை ஏற்கத் தயாராக
இருந்தது. பிரான்சின் மறுப்பிற்கு பதிலடியாக
ஹிட்லர் அம்மாநாட்டிலிருந்தும், பன்னாட்டு
சங்கத்திலிருந்தும் ஜெர்மனியை விலக்கிக்
கொண்டார். தனது முடிவை பொது வாக்கெடுப்பிற்கு
உட்படுத்திய ஹிட்லருக்கு சாதகமாக ஜெர்மானிய
மக்களின் பெரும் ஆதரவு குவிந்தது. இதனால்
ஊக்கமடைந்த ஹிட்லர் மார்ச், 1935இல் கட்டாய
இராணுவ சேவையை வலியுறுத்தி அதன்
வாயிலாக ஐந்து லட்சம் என்ற பெரும் அளவிலான
எண்ணிக்கையில் இளைஞர்களைக் கொண்ட
இராணுவத்தை உருவாக்கப் போவதாக
அறிவித்தார். இந்நிகழ்வே வெர்செய்ல்ஸ் ஒப்பந்தம்
மீறப்பட்ட முதல் செயலாக அமைந்தது. பிரிட்டன்,
பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள்
பன்னாட்டு சங்கத்தில் கூடி ஜெர்மனியின்
போக்கைக் கண்டித்தனவேயன்றி வேறு எதுவும்
செய்யமுடியவில்லை. பிரிட்டன் ஜெர்மனியோடு
கப்பற்படை ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக்
கொள்ள முனைப்புக் காட்டியது. அதன்படி,
பிரிட்டனின் கப்பற்படை கட்டுமானப் பணிகளில்
35 சதவீதம் வரை ஜெர்மனி பெறுவதற்கு வாய்ப்பு
ஏற்படுத்தப்பட்டது. இத்தாலி எத்தியோப்பியா மீது 1935இல்
படையெடுத்தது. பேரரசர் ஹேல் செலாஸி (Haile
Selassie) பன்னாட்டு சங்கத்தில் முறையிட்டும் எந்தப்
பயனும் இருக்கவில்லை.
1930களில் ஏற்பட்ட பொருளாதாரப் பெருமந்தம் :
இரண்டாம் உலகப்போர் துவங்க முக்கியமான
பொருளாதார காரணம் பெருமந்தமே ஆகும்.
பெருமந்தம் பொருளாதார தேசியவுணர்வை
அதிகப்படுத்தியது. வேலைவாய்ப்பின்மையாலும்,
தொழில் தேக்கத்தாலும் பாதிக்கப்பட்ட அரசுகள்
இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது அதிக
வரியைத் திணித்து அதன் வாயிலாக உள்நாட்டில்
தயாரிக்கப்பட்ட பொருட்களின் நுகர்வையும் அதை
சார்ந்த சந்தையையும் பாதுகாக்க முனைந்தன.
இதன் விளைவாக, விரிவாக்க கொள்கைக்கு
வழியேற்படுத்தியதோடு பிரச்சனையைத் தீர்க்க
அண்டை நாடுகள் மீது படையெடுப்பதே தீர்வு
என்ற நிலைக்கு கொண்டுசென்றது. இதன்
முதல் நகர்வை ஜப்பானே மேற்கொண்டது.
அது 1931இல் உலகப் பொருளாதார சிக்கலை
எதிர்கொள்ள சீனாவில் மஞ்சூரியாவின் வடக்குப்
பகுதிகளை ஆக்கிரமித்தது. ஜப்பானிய ஏற்றுமதியில்
பட்டுத்துணிக்கான மூலப்பொருட்களும் பருத்தி
ஆடைகளும் எதிர்கொண்ட சரிவை நிலைப்படுத்த
மஞ்சூரியாவை ஆக்கிரமித்தால் அதை சந்தையாக
மாற்றிக்கொள்ளலாம் என்று ஜப்பானிய
இராணுவவாதிகள் அறிவுறுத்தியதால் அந்நாடு
போர் நடவடிக்கையில் இறங்கியது
ஜெர்மானிய பெரு வியாபாரிகளின் எதிர்பார்ப்பும், தேசப்பற்றாளர்களின் மனக்குறையும் :
பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்க ஐக்கிய நாடு
மற்றும் சோவியத் நாடு ஆகியவை உலகத்தின்
பெரும் நிலப்பரப்புகளை தங்களின் காலனிகளாகக்
கொண்டிருந்தன. ஐரோப்பிய கண்டத்தில் பெரும்
தொழிற்தேசமான ஜெர்மனியோ காலனிகள் ஏதும்
கொண்டிருக்கவில்லை. இதுவே ஜெர்மனியின்
பெருவியாபார அமைப்புகளை வெர்செய்ல்ஸ்
ஒப்பந்தத்தின் கூறுகளை உடைக்க த்
தூண்டுவதாக அமைந்தது. ஜெர்மனி போலந்திடம்
இழந்த பகுதிகளையும் ஜெர்மன் மொழி பேசும்
ஆஸ்திரிய நாட்டையும் சூடட்டன்லாந்து என்ற
செக் நாட்டு எல்லையில் அமைந்தபகுதிகளும்
ஜெர்மனியோடு இணைத்துக்கொள்ள விரும்பியது.
நாஜி ஆட்சியில் பெருவியாபார அமைப்புகளும்,
நாஜி கொள்கைகளும் இணக்கமானப் போக்கைக்
கொண்டிருந்தன. பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்க ஐக்கிய
நாடு மற்றும் சோவியத் நாடு ஆகியவற்றின்
சாம்ராஜ்யம் பூமியின் நிலப்பரப்பில் நான்கில்
ஒரு பகுதியை உள்ளடக்கியதாக இருந்தது.
ஒப்பீட்டளவில் ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான்
ஆகியவை சிறியனவாகவே தோன்றின.
ஜெர்மானிய தேசபக்தி கொண்டோர் ஒரு
ஜெர்மானியனின் வாழ்விடமாக சராசரியாக .004
சதுர மைல்களே உள்ளது என்பதையும், அதே
வேளையில் சராசரியாக ஒரு பிரிட்டானியனால்
ஏகாதிபத்தியத்திற்கு உட்பட்ட மூன்று சதுர
மைல்களில் உள்ள வளங்களையும், பொருளாதார
வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ள முடிகிறது
என்பதனையும் சுட்டிக்காட்டினார்கள்.
ஸார் பகுதியை ஜெர்மனியோடு இணைத்தது:
வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின்படி ஜனவரி
1935இல் ஸார் பகுதியில் பொது வாக்கெடுப்பு
நடத்தப்பட வேண்டும். அப்பகுதி மக்கள் தாங்கள்
ஜெர்மனியுடனோ, பிரான்சுடனோ அல்லது
பன்னாட்டு சங்கத்தின் கட்டுப்பாட்டிலோ இருக்கப்
போவதை அவர்களே முடிவுசெய்ய வேண்டும்.
வாக்களித்தவர்களில் தொன்னூறு சதவீத நபர்கள்
ஜெர்மனியோடு இணைவதையே விரும்பினார்கள்.
அதனால் மார்ச் 1935இல் ஸார் பகுதி ஜெர்மனியோடு
இணைக்கப்பட்டது. இது ஹிட்லருக்கு பெரும்
மனவலிமையை ஊட்டியது.
ரைன்லாந்து இணைக்கப்படல் :
வெர்செய்ல்ஸ் ஒப்பந்தத்தின் கீழ் ஜெர்மனி
தனது இராணுவத்தை ரைன்லாந்தில் இருந்து
விலக்கிக்கொள்ள ஒப்புக்கொண்டதையும்
மீறி 1936இல் ஹிட்லர் மீண்டும் அப்பகுதியில்
இராணுவத்தை குவிக்கலானார். பிரெஞ்சுக்காரர்கள்
கண்டித்திருந்தால் ஜெர்மானியர்கள் பின்வாங்கி
இருக்கக்கூடும். பிரெஞ்சுப் படைபலம் ஜெர்மனியை
காட்டிலும் வலுவாக இருந்தாலும் பொருளாதாரப்
பெருமந்தம் ஏற்படுத்திய பாதிப்பும், அதனால் அரசியல்
நிலையற்றத்தன்மையால் ஏற்பட்ட பாதிப்பால்
பிரதம அமைச்சரான எடூவார்ட் டலாடியர் (Edouard
Daladier) பதவி விலகுமளவிற்கு சென்றதாலும்
பிரான்சினால் வெர்செய்ல்ஸ் ஒப்பந்த முறிவில்
ஜெர்மனி ஈடுபட்டதை எதிர்க்க வலிமையற்று
இருந்தது.
ஆஸ்திரியாவை ஜெர்மனியோடு வலுக்கட்டாயப்படுத்தி இணைத்தது :
ஹிட்லர் ஆஸ்திரியாவில் பிறந்ததால் அது
ஜெர்மனியின் ஒருபகுதியாக இருப்பதையே
அவர் விரும்பினார். ஹிட்லர் ஆஸ்திரிய பிரதம
அமைச்சரான ஸ்கூஸ்னிக்கை (Schuschnigg)
பிப்ரவரி 1938இல் பவேரிய ஆல்ப்ஸ் மலையில்
இருந்த நகரான பெர்க்டஸ்காடனுக்கு
(Berchtesgaden) கலந்துரையாடும் நிமித்தமாக
அழைத்தார். அந்நிகழ்வில் ஆஸ்திரிய பிரதம
அமைச்சர் நாஜி கட்சியை அவர் நாட்டில்
அங்கீகாரமளிக்கவும் அந்நாட்டுப் பொருளாதாரத்தை
ஜெர்மனியோடு இணைக்கவும் தவறினால்
படையெடுப்பை எதிர்கொள்ளநேரிடும் என்றஒற்றை
தெரிவு வழங்கப்பட்டு எச்சரிக்கை விடப்பட்டார்.
ரோம்-பெர்லின் அச்சின் உருவாக்கத்தோடு
ஆஸ்திரியா இத்தாலியின் ஆதரவை இழந்திருந்தது.
வேறு வழி தெரியாத ஸ்கூஸ்னிக் அந்த முதல்
தெரிவை ஏற்றுக்கொள்ள உடன்பட்டார். ஹிட்லரின்
நிர்ப்பந்தத்தால் இது குறித்துப் பொதுவாக்கெடுப்பு
நடத்தப்போவதாக வெளியிடப்பட்டதனை
புறந்தள்ளிய ஆஸ்திரிய பிரதம அமைச்சர்,
அந்நாட்டில் நாஜி அரசை ஏற்படுத்தினார். அதன்பின்
ஜெர்மானிய படைகள் வியன்னாவிற்குள் நுழைந்து
அந்நாட்டின் மீது கட்டுப்பாட்டை நிறுவ ஆரம்பித்தன
சூடட்டன்லாந்து ஆக்கிரமிப்பு :
ஐரோப்பாவின் முக்கிய சக்திகளிடமிருந்து
எந்த எதிர்ப்பையும் எதிர்கொள்ளாத ஹிட்லர்
தனது பார்வையை செக்கோஸ்லோவாக்கியா
மீது திருப்பினார். ஜூன் 1938இல் ஹிட்லர்
சூடட்டன்லாந்தை ஆக்கிரமிக்கும் தனது
நோக்கை இராணுவத்திற்கு ஆணைகள்
வாயிலாக தெரிவித்தார். சூடட்டன்லாந்தில் வாழும் ஜெர்மானியர்கள்
மிக மோசமாக ஒடுக்கப்படுகிறார்கள் என்பது போன்றதொருப்
பிரச்சாரத்தை தெளிந்த முறைமையுடன்
நாஜி கட்சிப் பரப்பியது. பிரான்சையும்,
செக்கோஸ்லோவாக்கியாவையும் கலந்து பேசிய
பிரிட்டிஷ் பிரதம அமைச்சர் நெவில் சாம்பர்லின்,
பாதிக்கு மேல் ஜெர்மானிய மக்கள் தொகையை
உள்ளடக்கிய பகுதிகளை ஜெர்மனியிடம்
ஒப்படைக்க இசைந்தார். ஆனால் போரை
விரும்பிய ஹிட்லரோ அதை ஏற்க மறுத்தார். இது
குறித்த பொதுவாக்கெடுப்பை நடத்துவதையும்
அவர் விரும்பவில்லை. அதனால் அத்தகையப்
பொதுவாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்னரே
அவர் சூடட்டன்லாந்தை தனது இராணுவத்தை
கொண்டு ஆக்கிரமித்தார்.
மூனிச் ஒப்பந்தம் :
லண்டனில் எழுந்தப் பெருவாரியான
எண்ணவோட்டம் ஹிட்லருக்கு எதிரான போரை
நாடியதாகவே இருந்தது. ஆனால் சாம்பர்லினும்,
பிரெஞ்சு பிரதம அமைச்சரும் ‘சமரசப்படுத்தல்’
(appeasement) என்ற கொள்கையை முன்னிறுத்தி
எவ்வாறாயினும் அமைதியை நிலைநிறுத்த
முயன்றனர். அதைத் தொடர்ந்து நடந்த மூனிச்
மாநாட்டில் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும்
இத்தாலி ஆகிய நாடுகளின் பிரதம அமைச்சர்கள்
கூடிப்பேசி ஹிட்லர் அக்டோபர் 1இல் நிர்ப்பந் தித்தது
போல சூடட்டன்லாந்தை ஜெர்மானியப்
படைகள் ஆக்கிரமித்துக் கொள்ளலாம் என்றும்
செக்கோஸ்லோவாக்கியாவின் பகுதிகளை
போலந்திற்கும், ஹங்கேரிக்கும் பிரித்துக் கொடுப்பது
என்றும் முடிவு செய்யப்பட்டது.
Comments
Post a Comment